அடுத்த ஐந்தாண்டுகளில் நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படும்: பிரதமர்

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தினால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க முடியாது போனாலும் அடுத்த ஐந்தாண்டுகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் கீழ் நிறைவேற்று அதிகாரம் முற்றாக ஒழிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற மொழிப் பயிற்சியாளர்களை பணியில் இணைத்து கொள்ளும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அமைச்சர் மனோ கணேசன் பாரிய வேலைகளை செய்துள்ளார். வீதி ஒன்றை நிர்மாணித்தால், அது கண்ணுக்கு புலப்படும். இப்படியான விடயங்கள் கண்ணுக்கு தெரிவதில்லை.

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் நடந்த சந்தர்ப்பத்தில் நாடு பிளவுப்படவில்லை. அனைவரும் இணைந்து அடிப்படைவாதத்தை கண்டித்தனர். எவரும் அந்த தாக்குதலின் ஊடாக நாட்டை பிளவுப்படுத்த தயாராகவில்லை. இதன் பின்னர் அரசியல் தீர்வை வழங்குவது என வாக்குறுதி அளிக்கப்பட்டது.

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு இணக்கப்பாட்டுக்கு வந்தோம். அதனை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் இருக்கின்றேன். கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசியக் கட்சியே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஏற்படுத்தியது.

எனினும் அதனை ஒழிக்க கட்சி இணங்கியது. நாடாளுமன்றத்தில் கட்சிக்கு பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தினால், நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க முடியவில்லை.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை விரைவாக ஒழிக்க முயற்சிக்க வேண்டும்.அது மீதமுள்ள பணி. அதனை ஒழிக்க மீண்டும் அனைவரிடமும் வாய்ப்பை கோருகிறோம் என பிரதமர் கூறியுள்ளார்.