புதிய மாற்று அரசியலை நோக்கி நகரும் தமிழ் பேசும் மக்கள்

Report Print Navoj in அரசியல்

காலம் காலமாக சார்ந்திருந்து வந்த அரசியலைத் தவிர்த்து, அடுத்து வரும் ஜனாதிபதித்தேர்தல் தொடக்கம் தமிழ் பேசும் மக்கள் புதிய மாற்று அரசியலை நோக்கி நகரும் சிந்தனையிலுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி உறுதிப்படத் தெரிவித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியினால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தமிழ் பேசும் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ தான் ஆதரவளித்து வந்துள்ளனர்.

பல வாக்குறுதிகளை நம்பி அவர்கள் இவ்வாறு முடிவெடுத்திருந்தாலும், அந்த வாக்குறுதிகளில் எவையும் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.

குறிப்பாக 2015இல் தொடங்கி தற்போது வரை நல்லாட்சியெனக் கூறிக்கொண்டு கோலாட்சிக் கொண்டிருக்கும் இந்த அரசாங்கத்தை அமைப்பதில் தமிழ் பேசும் மக்கள் பெரிய பங்கெடுத்திருந்தனர்.

ஆனால், இதே நல்லாட்சி அரசில் நல்லாட்சிக்குப் பாரிய பங்களிப்புச் செய்திருந்த தமிழ் பேசும் மக்கள் முற்றுமுழுதாக ஏமாற்றப்பட்டிருப்பது தமிழ் பேசும் மக்கள் மாற்று அரசியலைப்பற்றி சிந்திப்பதற்கு வழிவகுத்திருக்கின்றது.

மேலும், எதிர்வரப்போகின்ற ஜனாதிபதித்தேர்தலில் மஹிந்த அணி சார்பில் போட்டியிடத் தெரிவாகி இருக்கின்ற கோத்தபாய ராஜபக்ச‪ பௌத்த இனவாத அணியின் தீவிர அங்கத்தவர், அத்துடன் அவர் ஊழல், மோசடி, கொலைக் குற்றச்சாட்டுகளில் சிக்கியவராகவும், இராணுவ கண்ணோட்டமுள்ளவராகவும் இருப்பதால் அவரை தமிழ் பேசும் மக்கள் தீவிரமாக வெறுத்தொதுக்கும் மனோநிலையிலுள்ளனர்.

அதே வேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்பார்க்கப்படுகின்ற சஜித் பிரேமதாசவும் தனிப்பட்ட ரீதியில் சிங்கள பௌத்த போக்குடையவராக இருப்பதையும் தமிழ் பேசும் மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ஞானமுத்து ஸ்ரீநேசன் ஆகியோர் தமிழ் மக்கள் புதிய அரசியல் மாற்று வழிக்குத் திரும்பும் நிலையிலுள்ளதாக கடந்த காலங்களில் அவ்வப்போது தெரிவித்து வந்துள்ளனர்.

அதற்கேற்றாற்போல தற்போது பல சிறிய கட்சிகளும், சிறுபான்மைக் கட்சிகளும், சிவில் அமைப்புக்களும், புத்திஜீவிகளும், பாமரர்களும் என ஒட்டு மொத்தத்தில் பெரும்பாளானோர் புதிய மாற்று வழி அரசியலைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த மாற்றுச் சிந்தனைக்கான சந்தர்ப்பம் புதிய அரசியல் திருப்பு முனையாக அமையும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.