ஜனாதிபதி வேட்பாளர் வாய்ப்பினை பெற பல விளையாட்டுகளை சஜித் ஆடி வருகிறார்!

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக்கட்சிக்குள் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை மிகவும் பாரதூரமான நிலைமைக்கு சென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ரணில் விக்ரமசிங்கவும், சஜித் பிரேமதாசவும் தந்தை, மகன் போல பிரச்சினையை தீர்த்துக்கொள்வார்கள் என அமைச்சர் கிரியெல்ல கூறியுள்ளார்.அப்படி பிரச்சினையை தீர்க்க முடிந்திருந்தால், பிரச்சினை முடிவுக்கு வந்து அவர்கள் வேட்பாளரை மக்களுக்கு அறிமுகப்படுத்தியிருப்பார்கள்.

அதேவேளை சஜித் பிரேமதாச தற்போது விளையாட்டு காட்டுகிறார். யாழ்ப்பாணத்திற்கு சென்று நேற்று கால் பந்து விளையாடுவதை பார்த்தேன்.

ஜனாதிபதி வேட்பாளர் வாய்ப்பை பெற சஜித் பல விளையாட்டுகளை ஆடி வருகிறார். ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையை விட்டு செல்ல போவதில்லை எனக் கூறியது போன்று சிரேஷ்ட உறுப்பினர்களை தன்னுடன் வைத்துக்கொண்டு ஒவ்வொரு கருத்துக்களை வெளியிட்டும் வருகிறார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் யார் வேட்பாளராக போட்டியிட்டாலும் எமக்கு பிரச்சினையில்லை. ரணில் விக்ரமசிங்க, கரு ஜயசூரிய எவர் வந்தாலும் பிரச்சினையில்லை. இவர்கள் இந்த நாட்டை அழித்தவர்கள்.

புலி காட்டை மாற்றிக்கொண்டாலும் அதன் உடலில் உள்ள புள்ளி மாறாது. அவர்கள் தவறான முன்னுதாரணத்தை நாட்டுக்கு வழங்கி வருகின்றனர்.

ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றை எடுத்துக்கொண்டால், வேட்பாளரை அறிவிப்பத்தில் வரலாற்றில் எந்த கட்சிக்கும் இப்படியான நிலைமை ஏற்பட்டதில்லை.

அதேபோல், கோத்தபாய ராஜபக்சவை எமது கட்சியின் வேட்பாளராக எந்த பிரச்சினைகளும் இன்றி கூட்டு எதிர்க்கட்சி ஒரு மனதான தீர்மானத்தின் மூலம் தெரிவு செய்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.