அரசியலமைப்பை தனக்கு ஏற்ற விதத்தில் பயன்படுத்த முயற்சிக்கும் மைத்திரி!

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை தனக்கு ஏற்ற விதத்தில் தவறாக பயன்படுத்த முயற்சிப்பதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“இந்த நாட்டில் மாகாண சபைகள் இல்லை. 13வது திருத்தத்தின் அடித்தளமான மாகாண சபைகளில் இன்று தேர்தல் இல்லை, மக்களால் தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகளும் இல்லை. மாகாண சபைகளுக்கான தேர்தலை இந்த அரசாங்கம் இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஒத்திவைத்தது.

அதேபோன்று ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கும் நாம் இடமளிக்க மாட்டோம். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 2015ம் ஆண்டு ஜனவரி 09ம் திகதி ஆரம்பமாகியது.

19வது திருத்தத்தின் 03வது பிரிவு மற்றும் அரசியலமைப்பின் 30வது பிரிவு ஆகியவற்றை பார்த்தால் இந்தக் கேள்விக்கு சரியான பதில் கிடைக்கிறது. இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டமா அதிபரின் தெளிவான விளக்கத்தை கோர முடியும்.

2018ம் ஆண்டு ஜனவரி 14ம் திகதி அப்போது நீதியரசராக இருந்த பிரிசாத் டெப் தலைமையிலான நீதியரசர்கள் குழு அரசியலமைப்பின் பிரிவுகள் குறித்து உச்சநீதிமன்ற வழங்கியுள்ள வியாக்கியானத்திற்கு அமைய இந்த விடயம் தெளிவுசெய்யப்பட்டுள்ளது.

இதே சந்தேகத்தை 129வது பிரிவின் முதலாவது பிரிவுக்கமைய மீண்டும் ஒருமுறை முன்வைப்பதற்கு எந்தவொரு அடிப்படையும் கிடையாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பல தடவை உச்ச நீதிமன்றில் வியாக்கியானம் கோரியிருந்தார்.

முதலாவதாக தனது பதவிக்காலம் 05 அல்லது 06 வருடங்களா என்றிருந்தார். 05 வருடங்களே என்ற பதிலை உச்சநீதிமன்றம் வழங்கியிருந்தது.

பழைய அல்லது புதிய முறையில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியுமா என்று ஜனாதிபதி விளக்கம் கோரிய போது 2007ஆம் ஆண்டு திருத்தத்திற்கமைய பழைய முறையில் முடியாது என்றும் புதிய முறைக்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் அளிக்காததினால் நடத்த முடியாது என்றும் அறிவிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 129வது பிரிவை பயன்படுத்துவது அரசியலமைப்பை துஷ்பிரயோகம் செய்வதற்கு சமமாகும். வியாகுலமான, குழப்பமான பிரச்சினை குறித்து உச்சநீதிமன்றத்தை ஜனாதிபதி அணுகமுடியும் என்பதே 129வது பிரிவில் உள்ளது.

எனினும் தொடர்ந்தும் இப்படியான கேள்விகளை முன்வைத்து விளக்கம் கோருவது ஜனாதிபதி ஒருவருக்கு தகுதியற்ற செயலாகும். ஜனாதிபதி பதவிக்கும் அதுவொரு அவமரியாதை என்பதோடு தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதி சிறிசேனவுக்கும் அவமரியாதையை ஏற்படுத்தும் செயலாகும்.

தனக்கு அவசியமான விடயத்தை உச்சநீதிமன்றில் பெற்றுக்கொள்ள முடியாமற்போனது என்பது பிழையான முன்னுதாரணமாகின்றது. ஜே.ஆர். ஜயவர்தன 78ம் ஆண்டு அரசியலமைப்பு உருவாக்கிய காலம் தொடக்கம் இன்றுவரை அப்படியான முன்னுதாரணம் காணப்படவில்லை” என கூறியுள்ளார்.