லயனல் போபகே மீண்டும் ஜே.வி.பியில்

Report Print Steephen Steephen in அரசியல்

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பிரதான செயலாளர் லயனல் போபகே நேற்று கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.

லயனல் போபகே சில தசாப்தங்களாக அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபக தலைவராக ரோஹன விஜேவீரவுடன் ஏற்பட்ட கொள்கை ரீதியான மோதல் காரணமாக போபகே, அந்த கட்சியில் இருந்து விலகினார்.

வடக்கு மற்றும் கிழக்கு பிரச்சினை வழங்கப்பட வேண்டிய தீர்வு என்ற விடயத்தில், லயனல் போபகே, சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கையில் இருந்தார். அத்துடன் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை நியாயப்படுத்தியிருந்தார்.

எனினும் ரோஹன விஜேவீர “தமிழீழ போராட்டத்திற்கு தீர்வு என்ன” என்ற தலைப்பில் நூற்றுக்கணக்கான பக்கத்தில் தீர்வுகளை முன்வைத்திருந்ததுடன் பிரிவினைவாதத்திற்கு இடமில்லை என்ற கொள்கையை கொண்டிருந்தார்.

இந்த கொள்கை முரண்பாடு காரணமாக மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து விலகிய போபகே, தொடர்ந்தும் அதே நிலைப்பாட்டில் இருந்து வந்துள்ளார். குறிப்பாக விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் தன்னால் முடிந்த அனைத்து பணிகளை மேற்கொண்டுள்ளார்.

கட்டுரைகளை எழுதியதுடன் கருத்தரங்குகளையும் நடத்தியுள்ளார். மேலும் பேரணிகளையும் நடத்தியுள்ளார். போபகே தொடர்ந்தும் தனது கொள்கைக்காக குரல் கொடுத்து வருகிறார்.

இதன் காரணமாக அனுரகுமார திஸாநாயக்கவும் லயனல் போபகேவும் இணைந்துள்ளமை சம்பந்தமாக சில சிங்கள இணைத்தளங்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளன.

ரோஹன விஜேவீர கடுமையாக எதிர்த்த பிரிவினைவாதமும் அதன் பின்னணியில் வரும் ஏகாதிபத்தியத்தின் தேவைக்காக இவர்கள் இணைந்துள்ளதாகவும் அனுரகுமார திஸாநாயக்க, ஜனாதிபதி கனவுக்காக விஜேவீரவை அடகு வைத்துள்ளாரா? என அந்த இணையத்தளங்கள் கூறியுள்ளன.