ஐ.தே.முன்னணியின் தலைவர்கள் கூட்டம்: சஜித்துக்கும் அழைப்பு விடுத்த ரணில்

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் கலந்துக்கொள்ளும் விசேட கூட்டம் அடுத்த இரண்டு தினங்களில் நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்திற்கு பிரதமரின் அழைப்பின் பேரில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாச கலந்துக்கொள்ள உள்ளமை சிறப்பம்சமாகும்.

இந்த கூட்டம் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில், ஜனநாயக தேசிய முன்னணியை உருவாக்கும் யாப்பும் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த யாப்புக்கு ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் முழுமையான இணக்கத்தை வெளியிட்டுள்ளனர் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவாகும் விரிவான கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிக்க நியமிக்கப்பட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையிலான குழு அறிக்கையை மேற்படி கூட்டத்தில் சமர்பிக்க உள்ளது.

இலங்கையின் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்த அமைச்சர் சஜித் பிரேமதாச முன்வைத்துள்ள சில யோசனைகள் தொடர்பாகவும் ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்களின் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட உள்ளது.