ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் தலைவிதியையும் ஜனாதிபதி தேர்தல் மாற்றும்!

Report Print Navoj in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் என்பது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் தலைவிதியை மாற்றுகின்ற ஒரு தேர்தலாக இருக்கும் என்பதில் நீங்கள் அதிகம் நம்பிக்கை கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மத்தி சாதுலியா வித்தியாலயத்தின் இரண்டு மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த காலத்தில் இராணுவ வல்லமையோடு இருந்தவர்கள் இராணுவ வல்லமையை கொண்டு பயமுறுத்தி, அச்சுறுத்தி, வடக்கு மற்றும் கிழக்கிற்கு அப்பால் இருக்கின்ற சிறிய கிராமங்களில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களை அச்சுறுத்தி விடுவார்களோ என்ற அச்சம் எங்களுக்கு இருக்கின்றது.

வடக்கு மற்றும் கிழக்கிலே இருக்கின்ற முஸ்லிம்களுக்கு தேசத்திலே என்ன நடக்கின்றது என்பது பற்றி பூரண அறிவு இல்லாமல் நடந்து கொண்டிருக்கின்றார்கள் என்று கவலையோடு நான் இருக்கின்றேன்.

வடக்கு மற்றும் கிழக்கிற்கு அப்பால் மூன்றில் இரண்டு இஸ்லாமிய சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. இவர்கள் எப்போது தாக்கப்படுவார்கள், எப்போது விரட்டப்படுவார்கள், எப்போது அச்சுறுத்தல் விடுக்கப்படுவார்கள் என்ற அச்சத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் தான் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை நாங்கள் முகங்கொடுக்க இருக்கின்றோம்.

வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் என்பது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் தலைவிதியை மாற்றுகின்ற ஒரு தேர்தலாக இருக்கும் என்பதில் நீங்கள் அதிகம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

எனவே, தேசத்தில் இருக்கும் முஸ்லிம் கட்சிகள், சிறுபான்மை கட்சிகள், சிறிய கட்சிகள் ஒன்றிணைந்து எமது சமூகத்தை பாதுகாத்துக் கொள்ளக் கூடிய வேலைத் திட்டத்தை யாருக்கு வழங்குவதன் மூலம் யாரை ஜனாதிபதியாக்க முடியும் என்றும், யாருக்கு அந்த அதிகாரத்தை கொடுப்பதன் மூலம் இந்த நாட்டிலுள்ள சிறுபான்மை சமூகத்தை, முஸ்லிம் சமூகத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்கின்ற வேலைத் திட்டத்தில் விரைவில் அந்த பெயர்களை உங்களுக்கு நாங்கள் அறிவிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.