ஜனாதிபதியின் நடவடிக்கை ஜனநாயகத்திற்கும் ஊடக சுதந்திரத்திற்கும் பிரச்சினை! தென்னிலங்கை அமைச்சர் சாடல்

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தலில் சாதகத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அல்லது, கடந்த ஒக்டோபர் மாதத்தை போன்று மீண்டும் அரசியல் சதித்திட்டத்தை மேற்கொள்ள ஜனாதிபதி, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை, பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்தாரா என்ற சந்தேகம் இருப்பதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி எடுத்த இந்த தீர்மானத்தை நான் கொள்கை ரீதியாக எதிர்க்கின்றேன். இதன் பாரதூர தன்மையை உணர்ந்து ஒரு தீர்வை வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன்.

நான் அமைச்சரவை அந்தஸ்தற்ற ஊடகத்துறை அமைச்சராக பதவியேற்ற பின்னர், ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவரை மாற்ற முயற்சித்தேன்.

தலைவர் மீதுள்ள கோபம் காரணமாக இந்த தீர்மானத்தை எடுக்கவில்லை. ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தை முன்னேற்ற அந்த தீர்மானத்தை எடுத்தேன்.

ஊடகத்துறை அமைச்சின் கீழ் உள்ள நிறுவனம் ஒன்றை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவது ஜனநாயகத்திற்கு மட்டுமல்லாது ஊடக சுதந்திரத்திற்கும் பிரச்சினை.

ஜனாதிபதிக்கு எந்த நிறுவனத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர அதிகாரம் இருக்கின்றது. எனினும் அரச ஊடகத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது.

இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக அரச ஊடக நிறுவனம் ஒன்று பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது எனவும் ருவான் விஜேவர்தன குறிப்பிட்டுள்ளார்.