நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாவதா? இல்லையா? ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட தகவல்

Report Print Ajith Ajith in அரசியல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாவதா? இல்லையா என்பதை தானே தீர்மானிக்க முடியும் என்று சட்டமா அதிபர் தனக்கு அறிவித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான சந்திப்பொன்றில் இன்று உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

தெரிவுக்குழுவில் முன்னிலையாகுவது தொடர்பில் தேசிய பாதுகாப்பின் நலன்களுக்காகவும் ஜனநாயகத்தை மதிக்கும் ஒரு நபராகவும் தான் சரியான முடிவை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தெரிவுக்குழுவின் முன் சாட்சியமளிக்க ஜனாதிபதி தீர்மானிக்கும் நாளில் திகதியை ஒதுக்குமாறு ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் தெரிவுக்குழு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.

இந்நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி அலுவலகம், பயங்கரவாதத்தைத் தடுப்பதற்காக சட்டங்களை திருத்தி அதை செயல்முறைப்படுத்தும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி தெரிவுக்குழுவுக்கு அறிவுறுத்தியதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேசிய பாதுகாப்பு தொடர்பான எந்தவொரு முடிவுகளும் தாமதமின்றி எடுக்கப்பட வேண்டும் என்றும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் போன்ற சோக சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெற்றுவிடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளதாக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.