ரணிலைச் சந்திக்க வந்தார் சஜித்! தன்னை வேட்பாளராக்குமாறும் மன்றாட்டம்?

Report Print Rakesh in அரசியல்

“என்னை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக்குங்கள். அதன்பின்னர் நீங்களே பிரதமராகவும் கட்சியின் தலைவராகவும் தொடருங்கள்.”

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் நேற்றிரவு நடைபெற்ற பேச்சின்போது அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார் என அறியமுடிந்தது.

அதைக் கேட்டுச் சிரித்த ரணில், "முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவைப் பெற்று வாருங்கள். அதன்பின்னர் இது தொடர்பில் கட்சியின் மத்திய செயற்குழு முடிவு எடுக்கட்டும்" என்று கூறினார் எனவும் தெரியவந்தது.

சஜித், தான் ஜனாதிபதியானால் பிரதமர் பதவி தருவதாக சிலருக்கு அவர் தனிப்பட்ட ரீதியில் உத்தரவாதம் கொடுத்துள்ளார். அவர்களே சஜித்துக்குப் பின்னால் தற்போது நிற்கின்றார்கள்.

அலரிமாளிகையில் நேற்றிரவு ரணிலுடன் சஜித் பேச்சு நடத்துவதற்கு வருவதற்கு முன், சஜித் ஆதரவு தரப்பினர் நிதி அமைச்சில் மங்கள சமரவீரவுடன் சந்திப்பொன்றை நடத்துவதாக ரணிலுக்குத் தகவல் கிடைத்தது.

சஜித் வந்தபோது எங்கிருந்து வருகின்றீர்கள் என அவரைப் பார்த்து ரணில் கேட்டபோது ஜனாதிபதியின் இல்லத்திலிருந்து வருகின்றேன் என்று சொன்னார்.

நேற்று சில திறப்பு விழாக்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோடு சஜித் சென்று வந்திருந்தார்.

ஜனாதிபதியின் முழு ஆசீர்வாதத்தோடு நேற்றிரவு மங்களவின் நிதி அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றிருந்தது. அதன் பின்னரே ரணிலைச் சந்திக்க சஜித் வந்தார்.

நேற்றிரவு ரணில் - சஜித் இருவருக்கும் இடையில் மட்டுமே சந்திப்பு நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தது.

அவர்களது சந்திப்பின்போது மூத்த அரசியல்வாதியான அமைச்சர் ராஜித சேனாரத்ன மட்டும் பார்வையாளராக இருப்பார் என இருவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

ஆனால், சஜித் அலரிமாளிகை வரும்போது மலிக் சமரவிக்கிரம, கபீர் ஹாசீம் மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் அவருடன் சேர்ந்தே வந்திருந்தனர்.

அவர்கள் ஏன் வந்திருக்கின்றார்கள் என சஜித்திடம் ரணில் கேட்டபோது. "எனக்குத் தெரியாது; அவர்கள் தனியாக வந்துள்ளார்கள்" என்று சஜித் பதிலளித்தார். அதன்பின்னர் அவர்கள் பேச்சில் கலந்துகொள்ள அனுமதி அவழங்கப்படவில்லை.

இந்தப் பேச்சில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. பேச்சின் பின்னர் அலரிமாளிகையிலிருந்து சஜித் அங்கிருந்து வெளியேறிச் சென்றபோது, "சஜித் நல்லவர்.

ஆனால், சஜித்தை சிலர் அம்பாகப் பாவித்து சுயலாபம் பெற முயல்கின்றார்கள்" என்று அங்கிருந்த தனக்கு நெருக்கமானவர்களிடம் ரணில் தெரிவித்தார் என அறியமுடிந்தது.