தான் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களுக்கு தீர்வு நிச்சயம்! மற்றுமொரு ஜனாதிபதி வேட்பாளர் உறுதி

Report Print Murali Murali in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற எந்தவொரு வேட்பாளரினாலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கமுடியாது என ஐக்கிய சோஷலிசக் கட்சி தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், அதன் தலைவரான சிறிதுங்க ஜயசூரிய இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், தாம் ஜனாதிபதியானால் அனைத்துப் பிரச்சினைக்கும் உரிய தீர்வை அளிப்பதாகவும் உறுதியளித்தார்.

ஐக்கிய சோஷலிச கட்சியின் தலைவரான சிறிதுங்க ஜயசூரிய இம்முறை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிடுவதாக இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“இந்த சமூகம் ஜனாதிபதி தேர்தல் ஊடாக எதிர்காலம் பற்றிய சிறந்த ஆரம்பம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பை வைத்திருக்கிறது. இந்நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்களில் எவரும் சிறந்த திட்டத்தை முன்வைக்கவில்லை.

முகத்தை மட்டுமே காண்பிப்பதில் முயற்சித்திருக்கின்றனர். தேசியப் பிரச்சினையினால் 30 வருடப் போர் இடம்பெற்றது. இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு என்ன திட்டத்தை வைத்திருக்கிறார்கள்? தேசியப் பிரச்சினை ஒன்று இருக்கிறதா இல்லையா?

அதற்கு ஆம் என்று சொல்ல முடியுமா? இந்த நாட்டில் தமிழ் மக்கள் புறம்பான மதம், கலாசாரம், மொழி மற்றும் புறம்பான நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்கள் இருக்கின்றனர். அவர்களது பிரச்சினைக்கு வழங்கும் தீர்வு என்ன?

அதேபோல மலையகப் பெருந்தோட்ட மக்கள் கேட்கும் 1000 ரூபா அல்ல, வெறும் 50 ரூபா அதிகரிப்பைக்கூட இந்த அரசாங்கத்தினால் வழங்கமுடியாதிருக்கிறது.

ஜனாதிபதி முறைமையை மாற்றுவதாக ஆட்சிக்குவந்த ரணில்-மைத்திரி அரசாங்கம் செய்தது ஒன்றுமே கிடையாது. இடதுசாரி என்றுகூறிக்கொண்டு சிவப்புச் சட்டையை வாடகைக்கு எடுத்த சிலர் உள்ளனர்.

அதேபோல கோத்தபாய ராஜபக்சவை மஹிந்த ராஜபக்ச வேட்பாளராக நியமிக்கும்வரை அவர் அமெரிக்கக் குடியுரிமையை நீக்கவில்லை. அவர் ஜனாதிபதியானால், இலங்கை ஜனாதிபதி இலங்கை பிரஜை, அவரது மனைவி அமெரிக்கப் பிரஜை.

வேட்பாளர்களை இன்று களமிறக்குவதற்காக பிரமாண்ட மேடைகளும், கோடிக்கணக்கான பணமும் விரயம் செய்கின்றன. இது புதுவிதமான நோயாகும். அதேபோல ரணிலா? சஜித்தா? என்கிற விடயமும் பேசப்படுகின்றது. சஜித்தினால் ஒன்றும் செய்யமுடியாது.

ரணிலும் அப்படித்தான். நல்லாட்சியில் 100 நாள் வேலைத்திட்டத்தில் இவர்கள் செய்த சிறு வேலைகூட பின்னர் நான்கரை வருட ஆட்சியில் செய்யவில்லை.

ஆகவே நாட்டிற்கு உகந்த சிறந்த வேலைத்திட்டத்துடன் ஐக்கிய சோஷலிசக் கட்சி சார்பாக நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.