சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு கதவடைப்பா? அலரி மாளிகையில் நேற்று நடந்தது என்ன?

Report Print Murali Murali in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளச் சென்ற கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலருக்கு கதவடைக்கப்பட்டதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியை சிதறடிப்பு செய்வதற்காக எதிர்தரப்பினரால் உருவாக்கப்படும் வதந்திகளே இவை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்கிற முடிவை எடுப்பதற்கான அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று இரவு கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொள்ளச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், அமைச்சருமான கபீர் ஹாஷிம் மற்றும் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோருக்கு கதவடைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் கேகாலையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் கபீர் ஹாஷிம், இவ்வாறு வெளியாகிவரும் செய்திகளில் எந்தவித உண்மையும் கிடையாது என்று கூறினார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “பலவந்தமாக செல்வதாயின் கதவுகளை உடைத்துக்கொண்டுதானே செல்ல வேண்டும். கதவுகளை திறந்துகொடுத்தார்கள் உள்ளே வரும்படி. அதனை பலவந்தம் என்று கூறமுடியாது.

மிகவும் அன்பாகவும் ஆதரவாகவும் எம்மை வரவேற்றார்கள். மிகவும் வெற்றிகரமாகவும், அமைதியான முறையிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. எப்போதும் கட்சி செயற்படுகின்ற வகையிலேயே பேச்சுவார்த்தையும் சிறப்பாக நடைபெற்றது” என அவர் மேலும் கூறினார்.

Latest Offers