இலங்கை அரசுகளால் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்! சி.வி.விக்னேஸ்வரன்

Report Print Gokulan Gokulan in அரசியல்

காலங்காலமாக ஆட்சிப்பீடமேறிய இலங்கை அரசுகளால் தமிழ் மக்கள் திட்டமிடப்பட்ட இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டும், ஏமாற்றப்பட்டும் வந்திருப்பதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுடனான சந்திப்பின் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில்,

அதன் எதிர்க்கோணமாகவே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்கின்ற வரலாற்று உண்மையை காலம் நன்கு பதித்து வைத்திருக்கின்றது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன போன்ற சிங்களத் தலைவர்கள் அன்பைப் போதிக்கும் பௌத்தத்தின் வழி தொடர்பவர்களாக, உண்மையான பௌத்தர்களாக இருந்திருந்தால் நாம் ஆயுதமேந்த நேரிட்டிருக்காது என்று தம்பி பிரபாகரன் கூறியிருந்தார்.

அதேபோல் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை விடயத்தில் தமிழ் அரசியல் தலைவர்கள் அதிக கரிசனை காட்டாது அரச ஒத்தோடிகளாக விலை போனமையே தமிழர்களின் இன்றைய துயர் நிலைக்கு காரணமாக அமைந்திருக்கின்றது என்று கூறலாம்.

'தீதும் நன்றும் பிறர்தரவாரா' என்ற புறநானூற்றுக் கூற்றுக்கு இலக்கணமாக எம்மவர் ஆகிவிட்டுள்ளமை நெஞ்சுக்கு வலியூட்டுகின்றது.

பிறந்த தாய் நாட்டிற்காகவும் உங்கள் மக்களுக்காகவும் இளமைக் காலங்களைத் துறந்து உங்களுடைய உயிர் உடல் உடமை அனைத்தையும் மக்களுக்காக அர்ப்பணிப்பதாக உறுதிபூண்டு கடந்த காலங்களில் நீங்கள் ஆற்றிய சேவைகள் காலத்தின் கணிப்பில் மக்கள் மனதில் உயர் நிலையில் பதியப்பட்டிருக்கின்றன.

நீங்கள் கோல் ஆட்சிக் காலத்தில் யுத்த இடர்நிலைகளுக்குள்ளும் எமது மக்கள் சுதந்திரமாகவும் கலை கலாசார பண்பாட்டுக் கட்டுக்கோப்போடும் வலம் வந்ததை அதிசயத்துடன் நினைத்துப் பார்க்கின்றேன்.

எமது கல்விநிலை அன்றிலிருந்து சிறுகச் சிறுகச் சறுகிக் கீழ்மட்டத்திற்குத் தற்போது வந்துள்ளது.

கடந்தகாலங்களில் நான் வடமாகாண முதலமைச்சராக இருந்தபோது என்னை அரசியலுக்கு கொண்டு வந்தவர்களாலேயே எனது மக்களுக்கான பணியை ஆற்றமுடியாதவனாக்கப்பட்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை முன்னிறுத்தி கொண்டுவரப்பட்ட இனப்படுகொலை தீர்மானத்தின் பின்னர், நான் சார்ந்திருந்த கட்சியினராலேயே நிர்வாகக் கட்டமைப்புக்குள் விரிசல்கள் ஏற்படுத்தப்பட்டு என்னை ஒரு நிர்வாகக் குறைபாடுள்ளவனாகக் காட்ட மேற்கொண்ட முயற்சிகளையும் நீங்கள் அறிவீர்கள்.

வரையறுக்கப்பட்ட மிகச் சொற்ப அதிகாரங்களை மட்டுமே உடைய வடமாகாண சபையின் முதல்வராக மத்தியைக் கண்டுபயப்படாமல், பல் இளிக்காமல் என்னால் இயன்றளவு பணிகளை ஆற்றியிருக்கின்றேன்.

குறிப்பாக முதலமைச்சர் நிதியம் ஒன்றினை உருவாக்கி எமது முன்னாள் போராளிகளினதும் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களதும் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் எனது சிந்தனையை அரசதரப்பும் அன்று நான் வகிபாகம் வகித்திருந்த கட்சியினரும் சேர்ந்து அது உருவாவதைத் தடுத்தமை நான் வகித்திருந்த முதலமைச்சர் பதவியின் அதிகாரங்களை உங்களுக்கு விளக்கும் என நான் நம்புகின்றேன்.

புனர்வாழ்வளிக்கப்பட்டதாக அரசாங்கத்தினரால் அறிவிக்கப்பட்ட எமது போராளிகளாகிய நீங்கள் ஜனநாயக அரசியல் வழி நின்று மக்கள் பணியாற்றுவதில் எந்தச் சட்டரீதியான தடங்கல்களும் இல்லை என்பதை உங்களுக்குத் தெளிவுறுத்துகின்றேன்.

வேண்டுமென்றே சில சக்திகளினால் உங்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படின் அதற்கான சட்டரீதியான பாதுகாப்பை வழங்குவதற்கு நானும் எமதுக ட்சியும் முன் நிற்போம் என்பதையும் நான் தெரியப்படுத்துகின்றேன்.

தமிழ் மக்கள் கூட்டணியானது சி.வி.விக்னேஸ்வரன் ஆகிய எனது கட்சியென்ற பார்வையினைத் தவிர்த்து கட்சியின் மத்திய குழுவினராகவும் மாவட்ட மட்ட பிரதிநிதிகளாகவும் இணைந்து எமது கட்சி எமது மக்களுக்கானது என்ற நிலைப்பாட்டில் நம்மை நாமே சரி செய்து பயணிப்பதற்கு இன்றையநாளில் உறுதி பூணுவோமாக என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers