ஜனாதிபதித் தேர்தலை காரணம் காட்டி வழக்கை ஒத்திவைக்க முயற்சிக்கும் கோத்தபாய

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் வேட்பாளராக போட்டியிடுவதால், முழுமையாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட வேண்டும் என்ற காரணத்தால், தனக்கு எதிராக மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடத்தப்படுவது, தேர்தல் பிரச்சாரத்திற்கு மிகவும் பாதிப்பதாக அமையும் என்பதால், ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை விசாரணைகளை ஒத்தி வைக்குமாறு கோரி கோத்தபாய ராஜபக்ச உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்ய தயாராகி வருவதாக தெரியவருகிறது.

டி.ஏ.ராஜபக்ச நினைவு அருங்காட்சியகத்தை நிர்மாணிக்க கோத்தபாய ராஜபக்ச மூன்று கோடியே 39 இலட்சம் ரூபா அரச பணத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தி அவருக்கு எதிராக மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த வழக்கு எதிர்வரும் 15ஆம் திகதி முதல் தினமும் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது.

இந்த வழக்கை விசாரிக்க விசேட மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என உத்தரவிட கோரி, கோத்தபாய தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

இதேபோன்ற மற்றுமொரு மனுவும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது.

இந்த மனுவும் விசாரணைக்கு எடுக்கப்படாது, தள்ளுபடி செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதனடிப்படையில் கடந்த ஒரு வருட காலமாக வழக்கு விசாரணைகளை இடைநிறுத்த கோத்தபாய ராஜபக்ச தரப்பினர் மேற்கொண்டு முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன.

இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலை காரணம் காட்டி புதிய துரும்புச் சீட்டை இறக்க கோத்தபாய தயாராகி வருகிறார் என பேசப்படுகிறது.

இதனிடையே ஒக்டோபர் 15ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோர முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அண்மையில் ஊடகங்களிடம் கூறியிருந்தார்.

அதேவேளை தான் நிரபராதி என்று நிரூபிக்கக் கூடிய வகையில் கொடுக்கல் வாங்கல்களை கோத்தபாய சட்ட ரீதியாக மேற்கொண்டிருந்தால், வழக்கு விசாரணைகளை தடுக்க அவர் இந்தளவுக்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என சட்டத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நிரபராதி என்று நிரூபிக்க அவரிடம் தெளிவான சாட்சியங்கள் இருந்தால், வழக்கை எதிர்கொண்டு விடுதலையாக முடியும்.

காமினி செனரத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கும் இப்படியே நிறைவடைந்தது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மூன்று கோடியே 39 இலட்சம் ரூபா அரச பணத்தை கையாடல் செய்தாகவே கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதனை விட பல மடங்கு பணத்தை சட்டத்தரணிகளுக்கு செலவிட்டு, வழக்கை தடுக்க கோத்தபாய மேற்கொள்ளும் முயற்சியும் அவர் மீது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் சட்டத்துறையினர் கூறியுள்ளனர்.

Latest Offers