கூட்டமைப்பினர் எனக்கே ஆதரவு - சஜித் நம்பிக்கை

Report Print Rakesh in அரசியல்

“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நான் களமிறங்க வேண்டும் என்பதில் பெரும்பாலான வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் உறுதியாக உள்ளனர். எனவே, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எனக்கே ஆதரவு வழங்குவார்கள்.”

இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச.

“கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் நான் ஒரே நேரத்தில் சந்தித்து எனக்கு ஆதரவு வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கவுள்ளேன்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐ.தே.கவின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையே கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த பேச்சு எந்தவித இணக்கப்பாடுமின்றி முடிவுற்றுள்ளது.

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவின்றி ஒன்றும் செய்யமுடியாது. அவர்களைப் பகைத்துத் தமிழர்களின் ஆதரவைப் பெறமுடியாது.

ஆகவே, அவர்களுடன் கட்டாயம் பேச்சு நடத்துங்கள்' என்று இந்தச் சந்திப்பின்போது சஜித்துக்கு ரணில் ஆலோசனை கொடுத்துள்ளார்.

இந்தநிலையில், கூட்டமைப்பினருடன் எப்போது பேச்சு நடத்தவுள்ளீர்கள் என்று சஜித்திடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

“ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக நான் போட்டியிடும் விருப்பத்தை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை நான் தனிப்பட்ட ரீதியில் ஏற்கனவே நேரில் சந்தித்துத் தெரிவித்துள்ளேன்.

எனக்கு ஆதரவு வழங்குமாறும் அவர்களிடம் கோரியுள்ளேன். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் நான் சந்திக்கவில்லை. தலைவர் சம்பந்தன் உட்பட சில பேருடன்தான் தனிப்பட்ட ரீதியில் பேச்சுக்களை நடத்தியுள்ளேன்.

எனவே, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் நான் ஒரே நேரத்தில் சந்தித்து எனக்கு ஆதரவு வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கவுள்ளேன்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நான் களமிறங்க வேண்டும் என்பதில் பெரும்பாலான வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் உறுதியாக உள்ளனர்.

எனவே, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எனக்கே ஆதரவு வழங்குவார்கள். இதில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.