விடுதலைப்புலிகளை காரணம் காட்டி சம்பவத்தை திசை திருப்பிய பாதுகாப்பு தரப்பினர்! அமைச்சர் சம்பிக்க

Report Print Kumar in அரசியல்

மலைநாடான கண்டியில் உள்ள சிங்களவர்களும் கரையோரத்தில் உள்ள தமிழ் - முஸ்லிம் மக்களும் ஒன்றாக இணைவதன் மூலமே சிறந்த நாட்டினை கட்டியெழுப்ப முடியும் என அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நாட்டை பாதுகாக்கும், நாட்டை உருவாக்கும் மக்கள் இயக்கத்தின் தேசிய வழி மாநாடு நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

மட்டக்களப்பு பகுதியை பொறுத்தவரைக்கும் நிலைமைகள் எவ்வாறு உள்ளது என்று எங்களுக்கு தெரியாது.

ஆனால் சிங்கள பகுதிகளை பொறுத்தவரையில் முஸ்ஸிம்களின் வர்த்தக நிலையங்களுக்கு சிங்கள மக்கள் பொருட்கள் வாங்க செல்வது குறைவான நிலையிலேயே உள்ளது.

முஸ்லிம்களை பொறுத்தவரையில் பொது இடங்களில் கூடுவதற்கும் தமது கடமைகளை செய்வதற்கும் அச்ச நிலையிலேயே இருந்து வருகின்றனர்.

இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். எமக்குள் இருக்கும் அச்சநிலைமைகள் தூக்கியெறியப்பட வேண்டும்.

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் அங்கு தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சநிலை உருவாகியுள்ளது.

இந்தியா, காஸ்மீருக்கு வழங்கிய விசேட அதிகாரத்தினை மீளப்பெற்றுள்ள நிலையில் அது இந்தியாவின் வழமையான மாநிலங்கள் போன்று செயற்படும் நிலை உருவாகியுள்ளது.

இதேபோன்று பங்களாதேஸில் தீவிரவாத, அடிப்படைவாத கொள்கையுடையவர்களுக்கு அந்த நாடு தண்டனை வழங்கியுள்ளது.

ஆகவே இவ்வாறான பிரச்சினைகள் எங்களது நாட்டுக்கு மட்டுமான பிரச்சினை அல்ல, ஆசியாவில் உள்ள அனைத்து நாடுகளுக்கான பிரச்சினையாக காணப்படுகின்றது.

இந்த பிரச்சினையை நாங்கள் சரியான முறையில் தீர்க்காவிட்டால் மக்கள் விடுதலை முன்னணி செய்த கிளர்ச்சி போன்றோ, விடுதலைப் புலிகள் மேற்கொண்ட போராட்டங்கள் போன்றோ இதுவும் பூதாகரமான போராட்டமாக வெடிக்கும் நிலைமை ஏற்படும்.

ஆகவே இலங்கை அரசாங்கம், அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், முஸ்லிம் மதத்தலைவர்கள் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு இருக்கின்றது.

இன்று படையினர், பொலிஸார் மற்றும் ஏனைய பாதுகாப்பு தரப்பினர் மீதும் இந்த ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

அரசியல்வாதிகளின் செயற்பாடுகளினால் பாதுகாப்பில் தவறுகள் நடைபெற்றுள்ளது என்பதை உணர முடிகின்றது.

2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்தே இந்த சம்பவங்கள் ஆரம்பமாகியுள்ளன.

இந்த தாக்குதலை விடுதலைப்புலிகளே செய்தார்கள் என்று அன்று பாதுகாப்பு தரப்பினர் இந்த சம்பவத்தினை திசை திருப்பிவிட்டனர். அதனை தொடர்ந்தே மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திலும் குண்டுத்தாக்குதல் நடைபெற்றது.

இந்த தாக்குதலை காத்தான்குடி மற்றும் கல்குடா பகுதிகளை சேர்ந்தவர்களே மேற்கொண்டிருந்தார்கள். மட்டக்களப்பு மாவட்டம் மூன்று இனங்களையும் கொண்ட விசேட மாவட்டமாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாங்கள் முன்னின்று உழைக்க வேண்டும். மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்களுக்கு இந்தவேளையில் நான் நன்றிசொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

மட்டக்களப்பில் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் கிறிஸ்தவ மக்கள் கொல்லப்பட்ட போதிலும் எந்தவித வன்முறைகளிலும் ஈடுபடாமல் அமைதிகாத்தற்காக மீண்டும் ஒருமுறை நன்றி கூறிக்கொள்கின்றேன்.

மதத்தினால், இனத்தினால் யாரையும் யாரும் தாக்குவதற்கோ, கொடுமைப்படுத்துவதற்கோ உரிமையில்லை. இலங்கைதான் எமது தாய் நாடு என்று கருத வேண்டும்.

இலங்கையின் பொதுவான சட்டத்திற்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers