சஜித்தை ஆதரிக்கும் ஐ.தே.முன்னணியின் கூட்டணி கட்சிகள்

Report Print Steephen Steephen in அரசியல்

அமைச்சர் ராஜித சேனாரத்னவை தவிர ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் தலைவர்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில், அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், றிசார்ட் பதியூதீன், பழனி திகாம்பரம், வீ.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் கட்சிகள் மாத்திரமல்லாது, பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் ஜாதிக ஹெல உறுமயவும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவை தெரிவித்துள்ளது.

இவர்களை தவிர அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவும், சஜித்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த வாரம் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக பிரச்சினை முடிவுக்கு வரும் என அமைச்சர் அஜித் பீ பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

வேட்பாளர் அறிவிக்கப்படுவதை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தாமதப்படுத்தி வருவதன் மூலம் ஜனநாயக அணிக்கு அரசியல் அநியாயத்தை செய்து வருவதாக ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனிடையே வேட்பாளர் அறிவிக்கப்படும் வரை தமது கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கவுக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொண்டு வருமாறு ரணில், சஜித்திடம் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.