ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்பினரின் இறுதி முடிவு..? சம்பந்தன் கூறும் விடயம்

Report Print Rakesh in அரசியல்

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் வேட்பாளர்கள் அனைவருடனும் பேச்சில் ஈடுபட நாம் தயாராக இருக்கின்றோம். பேச்சின் பின்னரே இறுதி முடிவு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவின்றி ஒன்றும் செய்ய முடியாது. அவர்களைப் பகைத்துத் தமிழர்களின் ஆதரவைப் பெற முடியாது. ஆகவே, அவர்களுடன் கட்டாயம் பேச்சு நடத்துங்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க விருப்பப்பட்டுக் கொண்டிருக்கும் சஜித் பிரேமதாஸவிடம் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சஜித் பிரேமதாஸவிடம் வினவியபோது, "ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக நான் போட்டியிடும் விருப்பத்தை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை ஏற்கனவே தனிப்பட்ட ரீதியில் நேரில் சந்தித்து தெரிவித்துள்ளேன். எனக்கு ஆதரவு வழங்குமாறும் அவர்களிடம் கோரியுள்ளேன்.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் நான் சந்திக்கவில்லை. தலைவர் சம்பந்தன் உட்பட சில பேருடன்தான் தனிப்பட்ட ரீதியில் பேச்சுக்களை நடத்தியுள்ளேன். எனவே, கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் நான் ஒரே நேரத்தில் சந்தித்து எனக்கு ஆதரவு வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கவுள்ளேன்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நான் களமிறங்க வேண்டும் என்பதில் பெரும்பாலான வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் உறுதியாக உள்ளனர். எனவே, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எனக்கே ஆதரவு வழங்குவார்கள். இதில் நான் நம்பிக்கை வைத்துள்ளேன் என்றார்.

இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் நிலைப்பாட்டைக் கேட்டபோது அவர் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இன்னமும் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தக் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு வழங்கும் என்று இதுவரை முடிவெடுக்கவில்லை. எனினும், சகல வேட்பாளர்களுடனும் மனம் திறந்து பேச நாம் தயாராக இருக்கின்றோம்.

அந்தப் பேச்சின் பின்னர் மாவட்ட ரீதியில் தமிழ் மக்களின் கருத்துக்களையும் கேட்டறிவோம். இறுதியில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் பேசிய பின்னரே எவருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் முடிவெடுப்போம்.

இந்த நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கின்றோம். கண்ணை மூடிக்கொண்டு நாம் தீர்மானங்களை எடுக்க முடியாது. அனைவரினதும் கருத்துக்களையும் கேட்டறிந்தே இறுதி முடிவெடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.