எதிர்க்கட்சி என்பதால் சேவையாற்ற முடியாதா? மஸ்தான் எம்.பி கேள்வி

Report Print Theesan in அரசியல்

எதிர்க்கட்சி கட்சி ஆசனங்களில் இருப்போருக்கு சேவையாற்ற முடியாது என்று முடிவெடுத்து முத்திரை குத்துவதற்கு பலர் பழக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த மனோபாவத்தை நாம் தகர்த்து விட்டிருக்கிறோம் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் குறிப்பிட்டார்.

முல்லைத்தீவு குமுழமுனை மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு தனது சென்ற வருட 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பெறப்பட்ட கற்றல் உபகரணங்கள், தளபாடங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைக்கும் வைபவத்தில் இன்று உரையாற்றும் போதே இக் கருத்துக்களை அவர் தெரிவித்தார்.

தமது அரசியலை தக்க வைப்பதற்காக வெளிப்படையாகத் தெரியக்கூடிய அபிவிருத்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து விளம்பரம் தேடும் அரசியலை செய்பவர்களிடமிருந்து நாம் வேறுபட்டு தேவையுடையவர்களை இனங்கண்டு சேவைகளைப் புரிய திடசங்கற்பம் பூண்டுள்ளோம்.

நான் எனது பாராளுமன்ற உறுப்பினருக்குரிய சம்பளத்தையும் எமது வன்னி மாவட்ட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கே அர்ப்பணித்துள்ளேன். மேலதிக வகுப்புகளுக்கும், கல்வி மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும் அந்தப் பணம் செலவிடப்படுகின்றது.

பாடசாலைக் காலம் என்பது எமது வாழ்வில் கிடைக்கும் பொற்காலமாகும். எமது எதிர்காலத்திற்கான விதைகள் இக்காலத்தில் தான் விதைக்கப்படுகின்றன.

பாடசாலை முடிந்து வீடு வரும் பிள்ளைகளிடம் அன்று என்ன கற்பிக்கப்பட்டன என்பது குறித்து அறிவதுடன் கற்றவற்றை மேம்படுத்துவது தொடர்பிலும் கூடிய கவனத்தை செலுத்துவதனூடே அவர்களது கற்றல் திறனை வளர்தெடுக்க முடியும்.

அன்பான மாணவர்களே இங்கு வழங்கப்பட்ட பொருட்கள் அரச நிதியிலிருந்து பெறப்பட்டது என்பதற்காக அவற்றை ஏனோதானோ என்ற மனப்பான்மையில் பயன்படுத்தாது மிகவும் கவனமாக கூடிய பயனை நீண்டகாலம் அடையக்கூடியவாறு வினைத்திறனுடன் பயன்படுத்துமாறு உங்களை நான் வினயமாக கேட்டுக்கொள்வதுடன் பெற்றோரும் இந்த விடயத்தில் சிரத்தையுடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

நான் பிரதியமைச்சராக பதவி வகித்த குறுகிய காலப் பகுதியில் பல மில்லியன் ரூபாய்களை அபிவிருத்திப் பணிகளுக்காக நாங்கள் செலவிட முனைந்த போது அதனை தடுத்து நிறுத்த சிலர் முற்பட்ட போது எமது மக்களின் தேவைகளை நிறைவேற்றியே தீர வேண்டும் என்ற எமது அந்த வேட்கை விஸ்பரூபமெடுத்து எமக்கெதிரான தடைகளையெல்லாம் தகர்த்து மிகவும் தரமான சேவைகளை உங்களுக்கு செய்வதற்கு அடிகோலிட்டது என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

இந்த குமுழமுனை மகா வித்தியாலயத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் இங்கே சுட்டிக்காட்டபட்டது.

மிக விரைவில் வட மாகாண ஆளுநரை சந்தித்து இந்தப் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வினை உங்களுக்கு வழங்குவேன் என மேலும் தெரிவித்தார்.