போர்க்குற்றவாளியான கோத்தபாயவிற்கு அடிப்படை அரசியல்கூட தெரியாது!

Report Print Rakesh in அரசியல்

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அரச தலைவர் வேட்பாளராகக் களமிறங்கியுள்ள கோத்தபாய ராஜாபக்ச போர்க்குற்றவாளி ஆவார். அவருக்கு அடிப்படை அரசியல்கூடத் தெரியாது.”

இவ்வாறு 'தேசிய மக்கள் சக்தி'யின் அரச தலைவர் வேட்பாளரும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

“அரச தலைவர் தேர்தலில் நூற்றுக்குத் தொண்ணூறு வீதமான தமிழ், முஸ்லிம் மக்கள் கோத்தபாய ராஜபக்சவுக்கு வாக்களிக்கமாட்டார்கள். சிங்கள மக்களிலும் பலர் அவருக்கு எதிராகவே வாக்களிப்பார்கள்.

ஒட்டுமொத்தத்தில் 30 வீத வாக்குகளைக்கூட அவர் பெறமாட்டார். அதேவேளை, பாரிய ஊழல், மோசடிகளை அரங்கேற்றி நாட்டின் பொருளாதாரத்தைப் படுபாதாளத்துக்குக் கொண்டு சென்ற ஐக்கிய தேசியக் கட்சி களமிறக்கவுள்ள வேட்பாளரும் 30 வீத வாக்குகளைப் பெறமாட்டார்.

ராஜபக்ச குடும்பம் இந்த நாட்டில் மீண்டும் சர்வாதிகார ஆட்சி நடத்தவே கோத்தபாயவை வேட்பாளராகக் களமிறக்கியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கோத்தபாய பதவி வகித்த காலத்தில் அவர் செய்த கொடூரங்களை - அட்டூழியங்களை தமிழ், முஸ்லிம் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் மறக்கமாட்டார்கள்.

கோத்தபாய எந்த முகத்துடன் வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார் என்று எமக்குத் தெரியவில்லை. அரச தலைவர் தேர்தலில் அவருக்குத் தக்க பாடம் புகட்ட வேண்டுமெனில் மூவின மக்களும் எனக்கு வாக்களிக்க வேண்டும்.

நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் தீர்க்கமான முடிவு எடுத்து வாக்களிக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தி'யின் ஆட்சி இந்த நாட்டில் மலர்ந்தால்தான் மூவின மக்களுக்கும் நிம்மதி கிடைக்கும்” என தெரிவித்துள்ளார்.