இதுவே சரியான சந்தர்ப்பம்! மக்கள் விடுதலை முன்னணியின் கோரிக்கை

Report Print Murali Murali in அரசியல்

பழைய திருடர்களையும், புதுத்திருடர்களையும் ஒன்றாக வீட்டிற்கு அனுப்பும் சந்தர்ப்பமாக எதிர்வருகின்ற தேர்தலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மக்கள் முன்பாக போலி நாடகத்தையே அரங்கேற்றி வருவதாகக் கூறிய அவர், அந்தக் கட்சியைச் சேர்ந்த பிரதான பதவிகளை வகிப்பவர்களில் எவரும் குற்றமற்றவர்களாக இல்லை என்றும் சாடினார்.

காலி – எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜே.வி.பி சார்பாக போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கான சந்திப்பொன்று நடத்தப்பட்டது. அதன்போது உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் வெளியே சண்டையிட்டுக் கொண்டாலும், ஆட்சியில் இருவரும் ஒன்றாகவே இணைந்து திருட்டுத்தனங்களை செய்தன.

ராஜபக்சவின் முகாமில் கடந்த ஒன்றரை வருடங்களாக ஆட்சிபுரிந்த முறையை பாருங்கள். கடந்த 2018ம் ஆண்டு பெப்ரவரி தேர்தலில் அதிகளவான உள்ளுராட்சி சபைகளை அவர்களே கைப்பற்றிக்கொண்டார்கள்.

இருப்பினும் வெற்றிபெற்று ஒன்றரை வருடங்களாகின்றதோடு அவற்றை நிர்வகிக்கின்ற பிரதேச சபைத் தலைவர், தவிசாளர் உட்பட பலரும் மிகப்பெரிய குற்றச் செயல்களை செய்தவர்களாகவே இருக்கின்றனர்.

வென்னப்புவ பிரதேச சபை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஒருவர்கூட தற்போது சிறை வைக்கப்பட்டுள்ளார். ஆனால் ஜே.வி.பியின் 450 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். அவர்களில் ஒருவர்மீதுகூட அப்படிப்பட்ட குற்றச்சாட்டு சுமத்த முடியாமலிருக்கின்றது.

வெளியே சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், பிரதேச சபை மற்றும் நகர சபைகளில் ஒன்றாகவே சேர்ந்து கொள்ளையிட்டார்கள். அவர்கள் சுயநல அரசியலை செய்கின்றனர்.

அந்த இரண்டு கட்சிகளுக்கும், எமது ஜே.வி.பியினது வித்தியாசமானது என்னவென்றால் அவர்கள் வயிற்றுப்பிழைப்புக்காக அரசியல் செய்கின்றனர். நாங்கள் மக்களுக்காக அரசியல் செய்கின்றோம்.

ஆகவே பழைய திருடர்கள் மற்றும் புதிய திருடர்களை ஒன்றாக வைத்து கொள்கை ரீதியில் அவர்களைத் தோற்கடித்து இந்த நாட்டை கட்டியெழுப்பும் சவாலை நாங்கள் பொறுப்பேற்கின்ற தருணம் வருகிறது” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers