தமிழர்களின் போராட்டம் நியாயமானதாலேயே சர்வதேசம் அக்கறை கொண்டுள்ளது

Report Print Kumar in அரசியல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உரிமை சார்ந்த கோரிக்கைகளும், தமிழர்களின் போராட்டங்களும் நியாயமானதாக இருந்ததன் காரணமாகவே சர்வதேசத்தின் பார்வை தமிழர்களின் மீது தொடர்ந்தும் இருந்து கொண்டிருக்கின்றது என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்துள்ளார்.

வெல்லவெளி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காக்காச்சிவெட்டை கிராமத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார். இங்கு தொடந்தும் உரையாற்றிய அவர்,

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசம் என்பதற்கும் மேலாக கடந்த காலங்களிலே அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டதுமான எல்லைக் கிராமங்களை அடையாளங்கண்டு அபிவிருத்தி செய்ய வேண்டும் என்கின்ற அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது செயற்பட்டுக் கொண்டு வருகின்றது.

ஏனென்றால் எமது தேசவிடுதலைப் போராட்டத்தில் இப்படியான கிராமங்கள் தான் மிகப் பெரும் பங்களிப்பினை ஆற்றியிருந்தன.

இதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் கடந்த காலங்களில் தம்மாலான அபிவிருத்திப் பணிகளை இப்படியான கிராமங்களை இனங்கண்டு மேற்கொண்டு உள்ளார்கள், தற்போது மேற்கொண்டும் வருகிறார்கள்.

இருந்தும் ஆளுங்கட்சியின் அமைப்பாளர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்கின்றது என்றும் கேட்கின்றார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருப்பதால் தான் ஐக்கிய தேசியக் கட்சி ஆளுங்கட்சியாக இருக்கின்றது. அதன் ஊடாக அவராலும் சில அபிவிருத்திகளை கொண்டு வரவும் முடிகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது அபிவிருத்திகளுக்கு முன்னுரிமை கொடுக்காது காலங்காலமாக எமக்கு ஏனைய சமுகங்களோடு வாழ சம உரிமை வேண்டும் எனப் போராடிவரும் கட்சி ஆனால் முஸ்லிம் கட்சிகள் அவ்வாறு இல்லை.

அவர்களுக்கு உரிமைகளை விட அபிவிருத்திதான் முக்கியம் என்ற கொள்கையோடு அரசியல் செய்ததன் காரணத்தினால் தான் அவர்களுக்கு எதிராக பேருவளை, மாவனெல்லை, திகண போன்ற இடங்களில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு நியாயங்கோர முடியவில்லை.

தமிழர்கள் அடிவாங்கிய போது தட்டிக்கேட்க சர்வதேச சமுகமிருந்தது. துரதிஸ்டவசமாக சர்வதேசத்தின் அனுசரணை முஸ்லிம் மக்களுக்கோ அல்லது முஸ்லிங் கட்சிகளுக்கோ இல்லை. ஏனென்றால் தமிழர்களாகிய நாம் ஓர் நியாயமான கோரிக்கையை முன்வைத்து போராடினோம்.

அவ்வாறே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் உரிமை சார்ந்த விடயங்களில் நியாயமானதாக நடந்து கொள்வதன் காரணமாகவே சர்வதேசத்தின் பார்வை அன்று தொட்டு இன்று வரை தமிழர்களின் மீது தொடர்ந்தும் இருந்து கொண்டே இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.