ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை அரசாங்கம் அளித்துள்ள உறுதி

Report Print Ajith Ajith in அரசியல்

பல்வேறு தீவிர தடைகளுக்கு மத்தியிலும் இலங்கை நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை காக்கும் விடயங்களில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் உறுதியளித்துள்ளது.

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப்பிரதிநிதி தயானி மெண்டிஸ் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42 வது அமர்வு இடம்பெற்று வரும் நிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகளின் குழு வழங்கிய பரிந்துரைகளின் நடைமுறைகளாக இலங்கையின் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் குழு இலங்கைக்கு வந்து சென்ற ஒரு மாதக்காலப்பகுதிக்குள் இலங்கை பலவந்தமாக காணாமல் போகச்செய்யப்பட்டவர்கள் தொடர்பான சர்வதேச உடன்பாட்டினை கைச்சாத்திட தீர்மானித்தது.

காணாமல் போனவர்களுக்கு “பிரசன்னமில்லை” என்ற சான்றை சர்வதேச செஞ்சிலுவை வழங்க முன்வந்தபோது அதற்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பை வழங்கியது.

அத்துடன் காணாமல் போனோரின உறவினர்களுக்கு மாதாந்தம் 6ஆயிரம் ரூபாவை எதிர்வரும் ஒக்டோபரில் இருந்து கொடுப்பனவாக வழங்க இலங்கை அரசாங்கம் முன்வந்துள்ளது.

அதேவேளை இந்தக்குடும்பங்களுக்கு உதவுவதற்காக 2019ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் 500 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்துள்ளது என்றும் தயானி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.