நிதி அமைச்சரின் அனுமதியின்றி மதுபான சாலைகளுக்கு எவ்வாறு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது?

Report Print Kamel Kamel in அரசியல்

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் அனுமதியின்றி 84 மதுபான சாலைகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் இவ்வாறு மதுபானசாலைகளுக்கு எவ்வாறு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் மங்கள கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் உடன் விசாரணை நடத்தி இரு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எச்.ஜீ.சுமனசிங்கவிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதுபானசாலையொன்றுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் போது துறைசார் அமைச்சரிடம் அனுமதி பெற்றுக் கொள்வது அல்லது அது குறித்து அறிவிப்பது வழமையான நடைமுறையாகும்.

எனினும் கடந்த 2017ஆம் ஆண்டில் 10 மதுபானசாலைகளுக்கும், 2018ஆம் ஆண்டில் 74 மதுபானசாலைகளுக்கும் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

எனினும், இந்த அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறையின் பொது நிதி அமைச்சரிடம் அறிவிக்கவோ அல்லது அனுமதி பெற்றுக்கொள்ளப்படவோ இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மதுவரி சட்ட மூலகத்தின் பிரகாரம் துறைசார் அமைச்சர் தேவை என நினைத்தால் அனுமதிப்பத்திரம் வழங்கவும், புதுப்பிக்கவும், ரத்து செய்யவும் அதிகாரம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பில் அமைச்சரின் உத்தரவின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் சுமனசிங்க தெரிவித்துள்ளார்.

அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறைகளின் போது ஏதேனும் ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருந்தால் அந்த அனுமதிப்பத்திரங்கள் ரத்து செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.