ஒத்துழைப்புக்களை வழங்காவிட்டால் நாடாளுமன்ற உறுப்புரிமையும் நீக்கம்! தயாசிறி எச்சரிக்கை

Report Print Kanmani in அரசியல்

உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்கள் ஒழுக்காற்றுக் குழுவில் முன்னிலையாகாவிட்டால் அல்லது விசாரணைகளில் அவர்கள் முறையான பதிலை வழங்காவிட்டால், அவர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமையும் பறிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டவர்கள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

கட்சியால் எடுக்கப்படும் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்கள் ஒத்துழைப்புக்களை வழங்காவிட்டால், அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் நீக்கப்படும்.

கட்சிக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பாக அவர்களால் அனுப்பப்பட்ட தன்னிலை விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாத காரணத்தினாலேயே நாம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்.

அத்தோடு, அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் நாம் தீர்மானித்துள்ளோம்.

இதற்கான அறிவிப்புக்களை நாம் விரைவில் அவர்களுக்கு விடுக்கவுள்ளோம். அதற்கிணங்க, அவர்கள் கட்டாயம் இவற்றுக்கு பதிலளித்தே ஆகவேண்டும்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் நீதிமன்றுக்குச் சென்றே, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக செயற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில், எஸ்.பி.திசாநாயக்க, டிலான் பெரேரா, ஏ.எச்.எம்.பௌசி, லக்ஷ்மன் யாப்பா மற்றும் விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோரின் கட்சி உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

Latest Offers