சிறந்த எடுத்துக்காட்டான பாலித தெவரப்பெருமவின் செயல்! புகழாரம் சூட்டும் தமிழ் அமைச்சர்

Report Print Thirumal Thirumal in அரசியல்

களுத்துறையில் தோட்டத் தொழிலாளி ஒருவரின் சடலத்தை நீதிமன்ற உத்தரவை மீறி காணியொன்றில் பலவந்தமாக புதைத்த, நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவின் செயற்பாடு சட்ட ரீதியாக பிழை என்பதை தாம் ஏற்றுக் கொள்வதாக அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் மனிதாபிமான ரீதியாக அவரின் செயற்பாட்டை வரவேற்பதாகவும், தொழிலாளர்களின் உண்மையான உணர்வை புரிந்து கொண்டு செயற்படுவது வரவேற்கக்கூடியது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹட்டன் - ஸ்டிரதன் தோட்டத்தில் அமரர். பெரியசாமி சந்திரசேகரனின் திருவுருவ சிலை இன்றைய தினம் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

பெருந்தோட்ட தொழிலாளர்கள் இந்த நாட்டிற்காக பல வருடங்களாக உழைத்தாலும், அவர்கள் உயிரிழந்த பின் இறுதி கிரியைகளை செய்வதற்கு இடம் வழங்கப்படாமையானது மனிதாபிமானமற்ற ஒரு செயலாகும்.

இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது. அண்மையில் களுத்துறை - மத்துகமவில் இடம்பெற்ற சம்பவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும எடுத்த முயற்சி சட்ட ரீதியாக பிழையாக இருந்தாலும் மனிதாபிமான ரீதியில் அதனை ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.

இன்று அவருக்கு ஆதரவாக பல்வேறு பகுதிகளிலும் பெருந்திரளானவர்கள் அகிம்சை வழிகளில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு காரணம் தொழிலாளர்கள் தங்களுடைய குடும்பத்தில் ஒருவருக்கு நடந்த செயலாகவே இதனை கருதுகின்றார்கள்.

தொழிலாளர்களின் உரிமை தொடர்பாக பல அமைப்புகள் குரல் கொடுத்து வந்தாலும் ஒரு சில தோட்ட நிர்வாகங்கள் அவற்றை கண்டுகொள்வதில்லை.

ஒரு மனிதன் வாழ்ந்து மறையும் போது அவனுக்கு கொடுக்க வேண்டிய இறுதி மரியாதையை கூட வழங்குவதற்கு இந்த தோட்ட கம்பனிகள் முன்வருவதில்லை.

முழுமையாக தங்களுடைய வருமானத்தை மாத்திரமே கருத்தில் கொண்டு செயல்படுகின்றார்கள்.

எனவே இதுபோல இன்னும் ஒரு சம்பவம் நடைபெறாமல் இருக்க தொழிலாளர்கள் சார்பாக அனைவரும் குரல் கொடுக்க முன்வர வேண்டும்.

பாலித தெவரப்பெருமவின் செயற்பாடானது அனைத்து அரசியல்வாதிகளுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும் என குறிப்பிட்டுள்ளார்.