தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு? வியாழேந்திரன் எம்.பி கூறும் விடயம்

Report Print Kumar in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க என்ன கூறுகின்றாரோ அதைத்தான் சம்பந்தனுடன் தொடர்புடையவர்கள் செய்வார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - செங்கலடி, ஐயங்கேணி ஸ்ரீ வெங்கடேஸ்வர மகாவிஸ்ணுமூர்த்தி ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை இடம்பெற்றிருந்தது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

பிரதமர் ரணில் விக்ரமசிங்க என்ன கூறுகின்றாரோ அதைத்தான் சம்பந்தனுடன் தொடர்புடையவர்கள் செய்வார்கள். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் நூறு வீதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும்.

ரணில் விக்ரமசிங்க யாரை கை காட்டுகின்றாரோ அவருக்கு தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும். இதுதான் உண்மை இதுதான் யதார்த்தம்.

இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டங்களையும் நடத்த தேவையில்லை, பிரச்சாரங்களை நடத்த தேவையில்லை.

யாருக்கு ஆதரவு என இன்னும் இன்னும் மக்களை திசை திருப்ப தேவையற்ற கூட்டங்களையும், பிரச்சாரங்களையும் மேற்கொள்கின்றனர்.

இப்போது பரவலாக இணையத்தளங்களிலும் செய்திகளிலும் காணக் கூடியதாக உள்ளது, ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளாராம் சஜித் பிரேமதாஸவிடம் நீங்களே சென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாருக்கு ஆதரவாக உள்ளார்கள் என கேட்டு வாருங்கள் என்று.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கேட்டு வாருங்கள் எனவும் கூறியுள்ளார்.

எவ்வகையான திருவிளையாடல்களை மக்களுக்கு காண்பிக்கிறார்கள். இன்னும் இன்னும் மக்களை முட்டாள்கள் என நினைக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.