ஜனாதிபதி வேட்பாளரை உடன் பெயரிடுமாறு ரணிலிடம் சஜித் கோரிக்கை

Report Print Kamel Kamel in அரசியல்
67Shares

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதனை உடன் பெயரிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் எழுத்து மூல கோரிக்கை முன்வைத்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதில் தொடர்ந்தும் காலம் தாழ்த்த வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறு காலம் தாழ்த்துவதனால் நாட்டு மக்களுக்கும் கட்சிக்கும் அது பாதக நிலைமையை உருவாக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் குறித்த அறிவிப்பினை வெளியிடுவதற்கு காலம் தாழ்த்துவது ஜனநாயகத்திற்கு விடுக்கும் அச்சுறுத்தலாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயகத்தை நேசிக்கும் தாம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஜனநாயக ரீதியில் செயற்பட்டு வருவதாகவும், கட்சியின் பெரும்பான்மை விருப்பம் இல்லாவிட்டால் ஜனாதிபதியாக போட்டியிடும் அவசியம் தமக்கு கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் செயற்குழு மற்றும் நாடாளுமன்ற குழுவிடம் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு குறித்த பொறுப்பு ஒப்படைக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

அவர்களினால் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தாம் இணங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறான பிணக்குகள் ஏற்பட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை உறுதி செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

விரைவில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட உள்ள காரணத்தினால் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.