இன பிரச்சினை விடயத்தில் இந்தியா மென்போக்கை கைவிடவேண்டும்! எழுக தமிழ் பேரணியில் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை

Report Print Murali Murali in அரசியல்

வடக்கு கிழக்கில் எமது இனத்தின் இருப்பையும் அடையாளத்தையும் இல்லாமல் செய்யும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு “அரச இயந்திரத்தை” இன்று அரசாங்கம் முழுமையாகப் பயன்படுத்தி வருகின்றது” என வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அரசாங்கம் தனது எல்லா திணைக்களங்களையும், அதிகார சபைகளையும் மிகவும் நுட்பமான முறையில் எமக்கெதிராகப் பயன்படுத்தி வருகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.

யாழ். முற்றவெளியில் இன்று இடம்பெற்ற எழுக தமிழ் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“தமிழ் மக்களுக்கு எதிராக அநியாயங்களையும் அடக்குமுறைகளையும் நாம் இனியும் அனுமதிக்க முடியாது. அவ்வாறான அரச நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஒருபோதும் அடிபணியப் போவதில்லை.

தமிழ் மக்கள் வடக்கு - கிழக்கு இணைந்த தமது தாயகத்தில் சுய நிர்ணய உரிமையுடன் வாழும் வகையில் இந்தியா தீர்வு ஒன்றினை கொண்டுவரும் என்று எமது மக்கள் திடமாக நம்புகின்றார்கள்.

இந்நிலையில், இலங்கை இன பிரச்சினை தொடர்பில் இந்தியா இதுவரை கடைப்பிடித்து வரும் மென்போக்கு நிலையில் இருந்து விலகி தமிழ் மக்களின் இருப்பையும் அடையாளத்தையும் பாதுகாக்கும் வகையில் துணிச்சலான நடவடிக்கைகளைத் தாமதம் இன்றி எடுக்க வேண்டும்.

தமது உரிமைகளை வலியுறுத்தி எமது மக்கள் மேற்கொள்ளும் இந்த போராட்டத்தின் முக்கியத்துவத்தை எவரும் குறைத்து மதிப்பிடவோ அல்லது புறந்தள்ளிவிடவோ முடியாது.

எமது பகுதிகளில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கு தென் இலங்கையில் இருப்பவர்களை தயவுசெய்து நியமிக்காதீர்கள்.

யுத்தத்தினால் சின்னாபின்னமாகிப்போயுள்ள எமது பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்பி நாமும் உங்களைப்போன்று வளமான ஒரு வாழ்வில் ஈடுபடும் வகையில் ஒரு இடைக்கால விசேட பொருளாதார கட்டமைப்பை சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து உருவாக்குங்கள்.

எம்மை நாமே ஆட்சிசெய்து சுய கௌரவத்துடன் வாழ்வதற்கு எமக்கு இருக்கும் சுய நிர்ணய உரிமையினை ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது அங்கீகரியுங்கள் என்று எமது சிங்கள, முஸ்லிம் சகோதரர்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

எமது மக்கள் என்ன தீர்வினை விரும்புகின்றார்கள் என்பதை அவர்களின் கருத்தை அறியும் ஒரு சர்வஜன வாக்கெடுப்பை எமது மக்கள் மத்தியில் நடத்தி முடிவுசெய்யுங்கள்.

அதேவேளை சர்வதேச சமூகத்திடம் நாம் வேண்டிக்கொள்வது யாதெனில் உலகத்தின் மூத்த இனங்களில் ஒன்றான எமது தமிழ் இனத்தின் இருப்பும் அடையாளமும் இலங்கைத் தீவில் பல தசாப்த கால இன முரண்பாடு காரணமாக இல்லாமல் போகும் நிலைமை ஏற்பட்டிருப்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.

ஆகவே தயவுசெய்து சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள், கோட்பாடுகள் மற்றும் உடன்படிக்கைகளின் அடிப்படையில் உங்களுக்கு இருக்கும் தார்மீக கடப்பாட்டை உணர்ந்து செயற்படுங்கள் என்று நாம் உங்களிடம் கோருகின்றோம்.

இறுதி யுத்தத்தில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை ஐ.நா. மனித உரிமைகள் சபையினூடாக ஒரு பொறுப்பு கூறல் பொறிமுறைக்கு உட்படுத்த சர்வதேச நாடுகள் மேற்கொண்ட எல்லா முயற்சிகளும் தோல்வி கண்டுவிட்டன.

இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றதுக்கு கொண்டுசென்று கையாளுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது குறித்து சர்வதேச சமூகம் கவனம் செலுத்தவேண்டும்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Latest Offers