ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக சஜித் அறிவிப்பு! கட்சிக்குள் காணப்படும் சந்தர்ப்பத்தை கூறுகிறார் மங்கள

Report Print Kamel Kamel in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நெருக்கடி நிலைமைகள் எதுவும் ஏற்படவில்லை என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சரின் அதிகாரபூர்வ இல்லத்தில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கூறுகையில், மன்னிக்கவும் நெருக்கடி என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டாம், எமது கட்சியில் நெருக்கடி நிலைமை கிடையாது.

உண்மையில் ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயக கட்சி என்ற ரீதியில் இன்று அந்தக் கட்சிக்குள் எந்தவொரு நபரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது.

ஐக்கிய அமெரிக்காவில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக ஜனநாயகக் கட்சியின் சார்பில் பத்து வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.

அண்மையில் இங்கிலாந்தில் அந்நாட்டு பிரதமர் திரேசா மே பதவி விலகுவதாக அறிவித்த போது அந்தக் கட்சியைச் சேர்ந்த பத்து பன்னிரெண்டு பேர் பிரதமர் பதவிக்காக போட்டியிடுவதாக அறிவித்திருந்தனர்.

எனவே இதனை ஓர் நெருக்கடியாக பார்க்க வேண்டியதில்லை, இது ஜனநாயக கட்சியொன்றின் பலமாக நோக்கப்பட வேண்டும். ஏனெனில் எமது கட்சி தனது படுக்கையறையில் வேட்பாளர்களை தெரிவு செய்யும் கட்சி கிடையாது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார், வேறும் யாரும் போட்டியிடுவதாக இருந்தால் அவர்களும் அது பற்றி அறிவிக்க முடியும். அதன் பின்னர் ஜனநாயக ரீதியில் இந்த விடயத்திற்கு தீர்வினை எட்ட முடியும்.

இது நெருக்கடி கிடையாது. இது ஐக்கிய தேசியக் கட்சியின் பலம் என்பதனை நாம் இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.