ஊடகங்களின் அவசரத்திற்கு வேட்பாளரை தெரிவு செய்ய முடியாது! இம்ரான் மகரூப்

Report Print Mubarak in அரசியல்

ஒரு சில ஊடகங்களே ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளர்.

கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இன்று நாங்கள் நாட்டில் கருத்து சுதந்திரத்தை ஏற்படுத்தியுள்ளோம். யாரும் தமது கருத்துக்களை சுதந்திரமாக தெரிவிக்க முடியும்.

ஆனால் முன்னொரு காலம் இருந்தது அந்த குடும்பத்துக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக யாரும் கருத்து தெரிவிக்க முடியாது. அவ்வாறு அவர்களை விமர்சிப்பவர்களின் வீடுகளுக்கு வெள்ளை வேன் வந்தது.

ஆனால் நாம் இன்று அந்த வெள்ளை வேனுக்கு பதிலாக “சுவசரிய” எனும் உயிர்காக்கும் அம்பியூலன்ஸை கொண்டு வந்துள்ளோம்.

பிரதமர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் விசாரிக்கப்படுகிறார். இந்த ஜனநாயகமும் ஊடக சுதந்திரமும் இதற்கு முன்னர் இலங்கையில் காணப்பட்டதா என நீங்கள் சிந்திக்க வேண்டும்.

ஆனால் நாம் வழங்கிய ஊடக சுதந்திரத்தை சில ஊடகங்கள் இன்று துஸ்பிரயோகம் செய்கின்றனர். அண்மையில் அமைச்சர் சஜித் பிரேமதாச நான் ஒரு தொகை பௌத்த விகாரைகளையும் ஒரு தொகை கோவில்களையும் ஒரு தொகை பள்ளிவாசல்களையும் நிர்மாணிப்பேன் என கூறி இருந்தார்.

அடுத்த நாள் இந்த செய்தி சில தமிழ் இணையதளங்களில் அமைச்சர் சஜித் பிரேமதாச ஒரு தொகை பௌத்த விகாரைகளை நிர்மாணிக்க உள்ளதாக பெரிதாக பிரசுரித்திருந்தனர்.

அவர் சொன்ன கோவில், பள்ளிவாசல் கதைகளை காணக் கிடைக்கவில்லை. இதே போல் சிங்கள ஊடகங்களில் பள்ளிவாசல்களை நிர்மாணிக்க உள்ளதாக பெரிதாக பிரசுரித்திருந்தனர்.

இவ்வாறான சில ஊடகவியலாலர்களால் நேர்மையான பல ஊடகவியலாளர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுகின்றது.

இதன்மூலம் இவர்கள் மீண்டும் வெள்ளைவேன் கலாச்சாரத்தை ஏற்படுத்தவா முயற்சி செய்கின்றனர்.

இதே போன்றே மஹிந்த குடும்பத்தின் ஆசிர்வாதத்தில் இயங்கும் ஊடகங்களால் ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தை அடிப்படையாக கொண்டு ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிளவு, கபீர் காசிம் பதவி நீக்கப்படவுள்ளார் என பல கட்டுக்கதைகளை எழுதி வருகின்றனர்.

ஐக்கிய தேசிய கட்சி என்பது ஜனநாயக கட்சி. எங்கள் கட்சியில் அண்ணனோ தம்பியோ வேட்பாளரை தெரிவு செய்ய முடியாது.

செயற்குழுவும், நாடாளுமன்ற குழுவும் சேர்ந்து ஜனாயக ரீதியில் வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார்.

மஹிந்த ராஜபக்சவின் ஊடகங்களின் அவசரத்துக்கு எங்களால் வேட்பாளரை தெரிவு செய்ய முடியாது.

மக்கள் விரும்பும் வேட்பாளர் மிக பொருத்தமான நேரத்தில் அறிவிக்கப்படுவார் என்பதை மட்டும் இப்போது என்னால் கூற முடியும் என தெரிவித்துள்ளார்.

Latest Offers