ரணிலுடனான சந்திப்பில் கூட்டமைப்பு கடும் நிலைப்பாடு! ஜனாதிபதி வேட்பாளர் யார்?

Report Print Jeslin Jeslin in அரசியல்

அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களையும் சந்தித்து பேசிய பின்னரே ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பதென தீர்மானிப்போம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரில் தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றது.

இதன்போதே கூட்டமைப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

அத்துடன் புதிய அரசியலமைப்பை உருவாக்கி ஒரு வருடத்தில் இனப்பிரச்சினையை தீர்ப்பேன் என ரணில் விக்ரமசிங்க கூட்டமைப்பினரிடம் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இதன்போது கலந்துரையாடலில் ஈடுபட்ட கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,

தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இழுபடுகின்றன. கடந்த ஐந்து வருடத்திலும் அது தீர்க்கப்படவில்லை.

அடுத்த ஜனாதிபதி தேர்தலும் வந்து விட்டது. இதில் உங்கள் கட்சியிலேயே இன்னும் ஒற்றுமை ஏற்படவில்லை. உங்கள் கட்சியிலிருந்தே மூன்று வேட்பாளர்கள் எங்களுடன் கதைத்து விட்டார்கள்.

முதலில், யார் வேட்பாளர் என்பதை நீங்கள் தீர்மானியுங்கள். அதைத்தான் முதலில் செய்ய வேண்டும். அனைத்து வேட்பாளர்களுடனும் நாம் பேச்சு நடத்துவோம்.

தமிழ் மக்களின் தேசிய பிரச்சினையை தீர்க்க அதிகபட்ச தீர்வு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக யார் நம்பிக்கையளிக்கிறார்களோ அவர்களிற்கே எமது ஆதரவு. அதற்காக அனைவருடனும் பேசிய பின்னரே தீர்மானம் எடுப்போம் என தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், கடந்த ஐந்த வருடத்தில் தமது அரசினால் முன்னகர்த்தப்பட்ட விடயங்களை ரணில் சுருக்கமாக குறிப்பிட்டார்.

அரசியல் தீர்விற்காக புதிய அரசியலமைப்பு வரைபு உருவாக்கப்பட்டது, அபிவிருத்தியில் கூட்டமைப்பை பங்காளியாக்கியது உள்ளிட்ட விவகாரங்களை சுட்டிக்காட்டி, அது எதிர்காலத்திலும் தொடரும் என்றார்.

அத்துடன், தாம் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டினால், அடுத்த ஒரு வருட காலத்திற்குள் புதிய அரசியலமைப்பு உருவாக்க பணிகளை முடித்து, இனப்பிரச்சனையை தீர்ப்பேன் என உறுதியளித்தார்.

இதேவேளை, கல்முனை விவகாரத்தில் வாக்களித்தபடி ரணில் நடந்து கொள்ளவில்லை என்பதை கூட்டமைப்பு எம்.பிக்கள் சுட்டிக்காட்டினர்.

முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைத்து, பூர்வீகமாக குடியிருக்கும் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளிற்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறார்கள்.

இதற்கு ரணிலும் துணையாக இருக்கிறார் என காரசாரமாக கூட்டமைப்பு எம்.பிக்கள் குற்றம் சுமத்தினர்.

இந்த குற்றச்சாட்டை அவசரமாக மறுத்த ரணில், கல்முனை விரைவில் தரமுயரும் என மீண்டும் ஒரு வாக்குறுதியளித்துள்ளார்.

எல்லை மீள்நிர்ணய பணிகள் நடந்து வருவதாகவும், கல்முனையை தரமுயர்த்தும் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படுவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ரணில் தெரிவித்துள்ளார்.

தமது அரசியல், பொருளாதார நகர்வுகள் பற்றி கூட்டமைப்பு எம்.பிக்களிற்கு ஏற்கனவே விரிவாக பேசியதாக குறிப்பிட்ட ரணில், இவை பற்றி இனியும் விலாவாரியாக பேச வேண்டியதில்லையென்றும், மீண்டுமொருமுறை கூட்டமைப்பு எம்.பிக்களுடன் பேச விரும்புவதாகவும் குறிப்பிட்டு சந்திப்பை முடித்தார்.

சுமார் 30 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அமைச்சர் ராஜித சேனாரத்னவும் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.


you may like this video