நியமனங்களை வழங்க பணம் பெறும் அமைச்சர்கள்

Report Print Steephen Steephen in அரசியல்
69Shares

அரச நிறுவனங்களை அரசியல் மயப்படுத்தலில் இருந்து மீட்காமல் அவற்றை இலாபம் பெறும் நிறுவனங்களாக மாற்ற முடியாது என தேசிய மக்கள் சக்தி அமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் அவர் இதனை கூறியுள்ளார்.

அரச நிறுவனங்களை இலாபம் பெறும் நிறுவனங்களாக மாற்ற வேண்டும் என்றால், தொழில் ரீதியாக அவற்றை சுத்தப்படுத்த வேண்டும்.

அமைச்சர்கள் தற்போது தமது பிரதேசங்களில் உள்ளவர்களை தமது அமைச்சின் கீழ் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளை வழங்குகின்றனர். தகுதியானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை.

அமைச்சர்களுக்கு தேர்தல் காலங்களில் உதவும் நபர்களுக்கு தொழில் வழங்கும் இடங்களாக அரச நிறுவனங்கள் மாறியுள்ளன. நியமனங்களை வழங்கும் போது சில அமைச்சர்கள் பணம் பெற்றுள்ளனர்.

இதனை மிகவும் பொறுப்புடன் கூறுகின்றேன். அரச நிறுவனங்கள் கஷ்டத்தில் இயங்குவதற்கும், வினைதிறன் இல்லாமல் இருப்பதற்கும் இதுவே காரணம். இதனை நிறுத்த வேண்டும்.

எமது ஆட்சிக்காலத்தில் மீண்டும் அரச நிறுவனங்களை வினைதிறன் மிக்க நிறுவனங்களாக மாற்றுவோம் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.