ஜனாதிபதி நேற்று ஆற்றிய உரையின் மொழிப்பெயர்ப்பு சீன உள்துறை அமைச்சுக்கு

Report Print Steephen Steephen in அரசியல்

கொழும்பு தாமரை கோபுரத்தை திறந்து வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஆற்றிய உரையில் சீன நிறுவனம் ஒன்று தொடர்பாக கூறிய விடயம் சம்பந்தமாக சீனத் தூதரகம் உன்னிப்பாக ஆராய்ந்து வருவதாக தூதரகத்தின் அதிகாரி ஒருவர் எதிர்க்கட்சியின் முக்கிய தலைவரிடம் கூறியுள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதி ஆற்றிய உரை மற்றும் அதன் மொழிப்பெயர்ப்பு என்பன சீன உள்துறை அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் உள்துறை அமைச்சின் ஆலோசனைக்கு அமைய தேவையேற்பட்டால், அறிக்கை ஒன்றை வெளியிடுவதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.

தாமரை கோபுரத்தை நிர்மாணிக்க முற்பணமாக 2.5 பில்லியன் ரூபாய் பணம் உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொண்ட சீன நிறுவனத்திற்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் பின்னர் தேடிப்பார்த்த போது, அந்த பணமும் நிறுவனமும் காணாமல் போனதாகவும் ஜனாதிபதி நேற்று கூறியிருந்தார்.

எலிட் என்ற சீன நிறுவனத்திற்கே இந்த பணம் வழங்கப்பட்டுள்ளது எனவும் சீனாவில் இருப்பதாக கூறப்பட்ட அந்த நிறுவனத்தை அங்குள்ள இலங்கை தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு மூலம் தேடிப்பார்த்த போது, குறிப்பிட்ட முகவரியில் அந்த நிறுவனம் இருக்கவில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.