அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையா?

Report Print Murali Murali in அரசியல்

எந்தவொரு அரசியல் செயற்பாட்டிலும் சிறுசிறு சம்பவங்கள் இடம்பெறும். அவற்றை கணக்கில் எடுக்கக்கூடாது. ஒழுக்காற்று நடவடிக்கை உள்ளிட்ட பலவற்றையும் நீங்களும் கணக்கில் எடுக்க வேண்டாம்” என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி தலைமைத்துவத்திற்கு எதிராக செயற்பட்ட குற்றச்சாட்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுஜீவ சேனசிங்க மற்றும் அஜித் பி.பெரேரா ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாக அறிவிக்கப்பட்டது.

அதேபோல ஜனாதிபதி வேட்பாளர் பதவியை எதிர்பார்க்கும் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு எதிராகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது குறித்து இன்றைய செய்தியாளர் சந்திப்பின் போது கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய அவர்,

“எந்தவொரு அரசியல் செயற்பாட்டிலும் அப்படிப்பட்ட சிறுசிறு சம்பவங்கள் இடம்பெறும். அவற்றை கணக்கில் எடுக்கக்கூடாது. ஒழுக்காற்று நடவடிக்கை உள்ளிட்ட பலவற்றையும் நீங்களும் கணக்கில் எடுக்க வேண்டாம்” என கூறினார்.

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தாம் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடியதாக தெரிவித்த அமைச்சர், விசேட அவசியங்கள் குறித்து அல்லாமல் சமகால விவகாரங்கள் பற்றியே பேசப்பட்டதாகவும் கூறினார்.

நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பைப ல சந்தர்ப்பங்களில் சந்தித்திருக்கின்றேன். விசேட தேவைக்காக அவர்களை சந்திக்கவில்லை.

அவர்களை நாடாளுமன்றத்திலும், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த போது என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஆரம்பித்த நிகழ்வின்போதும் கூட்டமைப்பினரை சந்தித்து கருத்துப் பரிமாறல் செய்திருந்தோம்.

தற்போதைய சமகால விவகாரங்களைப் பற்றி பேசியிருந்தோம். அதேபோல இன்றிலிருந்து சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாட உள்ளோம்” என மேலும் கூறியுள்ளார்.