கோத்தபாயவின் ஆலோசகர் ஏன் அமெரிக்காவின் இராணுவ சேவைகள் தலைவரை சந்தித்தார்?

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் பொருளாதார ஆலோசகரான இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், அமெரிக்காவின் இராணுவ சேவைகள் செனட் குழுவின் தலைவர் ஜேம்ஸ் சின்ஹோப் என்பவரை சந்தித்தமை சந்தேகத்திற்குரியது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடனான எக்ஸா மற்றும் சோபா உடன்படிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வரும் ராஜபக்ச அணியை சேர்ந்த விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோர் இந்த இரகசிய கொடுக்கல், வாங்கல் சம்பந்தமான என்ன கூற போகிறார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து சஜின்வாஸ் மேலும் தெரிவிக்கையில்,

அஜித் நிவாட் கப்ரால் அண்மையில் செனட்டர் ஜேம்ஸ் சின்ஹோப்பை அமெரிக்காவில் வைத்து சந்தித்துள்ளார். அவர் செனட் சபையின் இராணுவ சேவைகள் குழுவின் தலைவர்.

இராணுவ சேவைகள் குழு என்பது செனட் சபை மற்றும் முழு ராஜதந்திரிகளின் பாதுகாப்பு குறித்து ஆராயும் அரசியலமைப்புச் சட்டத்தில் அதிகாரம் கொண்ட குழு. நிவாட் கப்ரால், இராணுவ சேவைகள் குழுவின் தலைவருடன் என்ன பேசினார் என்பதை நான் கூறுகிறேன்.

நிவாட் கப்ரால் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் என்ற வகையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ளார் என்பது தனிப்பட்ட ரீதியில் எனக்கு தெரியும்.

எதிர்காலத்தில் ஆட்சியமைக்கும் பொதுஜன பெரமுன அரசாங்கம் அமெரிக்காவுடன் எப்படியான உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளும் என்பது பற்றி அவர் பேசியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் இந்தியாவுடன் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது நல்லது. இந்த நாடுகளுடன் இணைந்து செயற்படவில்லை என்றால், உலக பொருளாதார பிரச்சினையில் முன்னோக்கி செல்வது சிரமமானது.

எனினும் தற்போதுள்ள கொள்கைக்கு அமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமெரிக்காவுடனான உடன்படிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்க இராணுவ சேவைகள் செனட் குழுவின் தலைவரை சந்தித்து என்ன பேசினார் என்பதை நிவாட் கப்ரால் வெளியிட வேண்டும்.

அது அவரது கடமை. முதலீடு பற்றி பேசியதாக அவர் கூறுகிறார். ஆனால், பாதுகாப்பு உடன்பாடுகள் தொடர்பான விடயங்களைளே பேசி இருப்பார்கள் என நான் நினைக்கின்றேன்.

இதனால், என்ன பேசப்பட்டது என்பதை வெளியிடுவது நிவாட் கப்ராலின் கடமை. அதேபோல் கூட்டு எதிர்க்கட்சியில் இருக்கும் விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில இது குறித்து தமது நிலைப்பாடுகளை வெளியிட வேண்டும்.

இவர்களின் கொள்கைகளுக்கு முரணாக நிவாட் கப்ராலை தூதுவராக அனுப்பி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனால், வீரவங்ச மற்றும் கம்மன்பில ஆகியோர் தமது கொள்கை என்ன என்பதை தயவு செய்து வெளியிட வேண்டும் எனவும் சஜின்வாஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.