விரைவில் டெல்லியில் உயர்மட்ட சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ள சுப்ரமணியம் சுவாமி

Report Print Rusath in அரசியல்

இலங்கை தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் நாரா.டி.அருண்காந்த் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியம் சுவாமி ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு நேற்றைய தினம் கொழும்பிலுள்ள ஹோட்டலொன்றில் நடத்தப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பாக இலங்கை தேசிய ஜனநாயக கட்சி இன்று வெளியிட்டுள்ள ஊடகக்குறிப்பில்,

சுப்ரமணியம் சுவாமியுடன், கட்சியின் தலைவர் அருண்காந் மற்றும் செயலாளர் நாயகம் சிவன் ரவிசங்கர் ஆகியோர் கலந்துரையாடிய போது, பா.ஜ.க அரசானது பெரும்பான்மையுடன் ஆட்சி செய்யும் இந்த ஐந்து வருடங்களிலேனும் இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண உதவுங்கள்.

இவற்றிற்கு அப்பால் இலங்கை தமிழ் மக்களின் வறுமையொழிப்பு, தொழில்வாய்ப்பு, கல்வி அபிவிருத்தி, உட்கட்டமைப்பு ஆகிய விடயங்களில் கூடுதல் அக்கறை செலுத்தி தமது பங்களிப்பை வழங்க வேண்டும்.

குறிப்பாக யுத்தம் நடைபெற்ற வடக்கு மற்றும் கிழக்கில் எந்த விதமான மறுவாழ்வு திட்டங்களும் பாரிய அளவில் முன்னெடுக்கப்படவில்லை. இதன் காரணமாக 90,000 மேற்பட்ட விதவைகள் வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்குண்டு சின்னாபின்னமாகி வருகின்றனர்.

அத்தோடு முன்னாள் போராளிகள் மறுவாழ்வு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுவிட்டன. சில இடங்களில் முன்னால் போராளிகள் பிச்சை எடுத்தும் வருகின்றனர்.

இவர்களின் வாழ்வு இப்படியே நீடிக்க வேண்டுமா? மலையக மக்கள் பாரிய அளவு வறுமையின் பிடிக்குள் சிக்குண்டு அதிலிருந்து மீள முடியாமல் திணறி வருகின்றனர்.

இலங்கையைப் பொருத்தமட்டில் தமிழ் இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு கிடைப்பதென்பது மிகவும் அரிதாகிக்கொண்டு வருகின்றது. ஆகவே எமது இளைஞர்களுக்கான தொழில்வாய்ப்பை பெருக்குமுகமாக தொழில்பேட்டைகள் அமைக்க ஆவண செய்ய வேண்டும்.

அதேபோன்று கல்விசார்ந்த உட்கட்டமைப்பு வசதிகளை பாரிய அளவு பெருக்கிட நிதியுதவியளிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் மக்களின் வீட்டுத் திட்டத்திற்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

இக்கோரிக்கைகளை மேலும் வலியுறுத்தி செயல் வடிவம் கொடுக்க வெளிவிவகார அமைச்சருடன் சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்து தரப்படல் வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கு பதில் அளித்துள்ள சுப்ரமணியம் சுவாமி, தேசிய கண்ணோட்டத்தோடு நீங்கள் பேசுவதை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது.

இந்திய அரசானது இலங்கைக்கு பாரிய அளவு நிதி வழங்கும் ஒரு நாடாகும். உங்கள் கோரிக்கைகளை சாதகமான முறையில் பரிசீலிக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்டவர்களை கோருகின்றேன்.

கூடிய விரைவில் டெல்லியில் உயர்மட்ட சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்ய என்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.