கட்சியின் கௌரவத்தை பாதுகாத்து அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும் - தயாசிறி ஜயசேகர

Report Print Steephen Steephen in அரசியல்

கட்சியின் கௌரவத்தை பாதுகாத்து அரசாங்கம் ஒன்றை உருவாக்கும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுடன் நேற்று மாத்தறையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 68வது மாநாடு அண்மையில் சுகததாச உள்ளக அரங்கில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதன் பின்னர் முதலாவது மாவட்ட மாநாடு இரத்தினபுரியில் நடத்தப்பட்டது. கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது நாங்கள் பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அது வெற்றியடைந்த பின்னர், கூட்டணி அமைத்து எமது கட்சியின் கௌரவத்தை பாதுகாத்து, எமது அரசாங்கம் ஒன்றை உருவாக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்போம்.

இதற்காகவே நாங்கள் அனைத்து அமைப்பு ரீதியான வலையமைப்புகளையும் வலுப்படுத்தி, கிராம மட்டத்தில் கட்சியை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

அதேபோல் தேர்தல் தொடர்பான அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படும். எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதியில் இருந்து டிசம்பர் 7 ஆம் திகதி வரையான காலத்திலேயே தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளனர்.

இதனடிப்படையில், தேர்தல் ஆணைக்குழு மிக விரைவில் தேர்தல் திகதியை அறிவிக்கும். எம்முடன் நடந்த பேச்சுவார்த்தையில் தேர்தல் ஆணைக்குழு இதனை கூறியது.

அதேபோல் சமூக ஊடகங்களில் வேட்பாளர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் சேறுபூசும் பிரசாரங்கள் மற்றும் சில ஊடகங்கள் ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் ஆதரவளித்து செய்திகளை வெளியிடுவது தொடர்பான விடயங்களை தடுத்து நிறுத்துமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.