தகுந்த நேரத்தில் கூட்டமைப்பின் ஆதரவு சஜித்திற்கு!

Report Print Murali Murali in அரசியல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரது ஆதரவு தகுந்த நேரத்தில் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு கிடைக்கும் என்று ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அமைச்சர் சஜித் பிரேமதாசவுடன் நடத்திய கலந்துரையாடலில் எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கும் நிலையிலேயே சஜித் அணியைச் சேர்ந்த அமைச்சரான அஷோக்க அபேசிங்க இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், வீடமைப்பு அமைச்சருமான சஜித் பிரேமதாச தனக்கான ஆதரவைக் கோரி பல்வேறு தரப்பினரிடமும் பேச்சுக்களை நடத்திவருகின்றார்.

அந்த வகையில் கடந்தவாரம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த அமைச்சர் சஜித் பிரேமதாச, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினரிடம் ஜனாதிபதி தேர்தல் விவகாரம் பற்றி கலந்துரையாடியிருந்தார்.

இந்தக் கலந்துரையாடலில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் சஜித் பிரேமதாஸவிடமிருந்து தெளிவான பதில் கிடைக்காததினால் பேச்சு தீர்மானமின்றி முடிவடைந்தது.

அதேபோல நேற்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய கலந்துரையாடலின்போது அமைச்சர் சஜித் பிரேமதாஸ விவகாரம் குறித்து அதிருப்தியை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய கலந்துரையடல் வெற்றியளித்ததாகவே அமைச்சர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான அணியினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொழும்பு தனியார் பேரூந்து நிலையத்திற்கு அருகில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சர் சஜித் பிரேமதாஸ அணியைச் சேர்ந்தவருமான போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அஷோக்க அபேசிங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு சஜித்திற்கே கிடைக்கும் என்று திட்டவட்டதாக தெரிவித்தார்.

“தமிழ் தேசியக் கூட்டமைப்பு சாதாரணமாக தேர்தலொன்று வரும்போது அவர்கள் எம்மோடு கூட்டணியாக செயற்படமாட்டார்கள். அவர்கள் அவர்களுடைய அடையாளத்தை வைத்துக்கொண்டு கட்சிக்கு உதவிசெய்வார்கள்.

துகுறித்து நாங்கள் கலந்துரையாடினோம். அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்தபோது அமைச்சர் சஜித் பிரேமதாஸ மற்றும் அமைச்சர் எரான் விக்ரமரத்னவுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சரவணபவன் பேச்சு நடத்தினார்கள்.

அந்த பேச்சுவார்த்தை வெற்றியளித்தது. அதேபோல அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரனும், மாவை சேனாதிராஜாவும் கலந்துரையாடலில் இணைந்திருந்தனர். சஜித் பிரேமதாஸ அவர்களிடமிருந்து அவசியமான நேரத்தில் அவசியமான ஆதரவினைப் பெற்றுக்கொள்வார்”)