ஜனாதிபதி முறைமையை ஒழிக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்! விமல் திட்டவட்டம்

Report Print Rakesh in அரசியல்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் வெற்றி கருத்துக் கணிப்புக்கள் மூலம் உறுதியாகியுள்ளதாலேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு திரைமறைவில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதித் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் தோல்விப் பீதியால் ஜனாதிபதியும், பிரதமரும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளனர் என்றும், இதற்கான விசேட அமைச்சரவைப் பத்திரம் இன்று சமர்ப்பிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்களின் இந்த முயற்சி வெற்றிபெறுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்பதுடன் தனிப்பட்ட விருப்பு - வெறுப்புகளுக்காக நாட்டின் அரசமைப்புடன் விளையாட வேண்டாம் எனவும் கூறிவைக்க விரும்புகின்றோம்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதியும் பிரதமரும் வீட்டுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் கௌரவமான முறையில் விடைபெற்று செல்லுமாறுச் கேட்டுக்கொள்கின்றோம்.

குறிப்பாக இறுதிக் காலப்பகுதியிலாவது கௌரவத்தைப் பாதுகாத்துக்கொள்வது குறித்து ஜனாதிபதி சிந்திக்க வேண்டும்.

ஏனெனில், எந்தக் கொம்பனைக் களமிறக்கினாலும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவே வெற்றி பெறுவார் என்பதைக் கருத்துக் கணிப்புக்கள் உறுதிப்படுத்திவிட்டன.

அதன்காரணமாகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கி ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைப்பதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் முற்படுகின்றனர். இதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். இந்த முயற்சிக்கு நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் கிடைக்காது என குறிப்பிட்டுள்ளார்.

You May Like This Video


Latest Offers