காய்நகர்த்தல்களைக் கருத்தில் கொண்டு தனித்துவத்தைக் காப்பாற்றுங்கள்: முன்னாள் முதல்வர் வலியுறுத்தல்

Report Print Rakesh in அரசியல்

முஸ்லிம் மக்களின் வாக்கு வங்கியின் பலமே பேரம் பேசும் சக்தியின் அடிநாதமாகும் எனினும், இதைச் சிதைப்பது குறித்தே தற்போது பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு அதற்கான காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்படுகின்றன என கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த செய்திக் குறிப்பில்,

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் வேளையில், தத்தமது வெற்றியை இலக்காகக் கொண்டு பெரும்பாண்மை அரசியல் கட்சிகள் சில தமது பரப்புரைகளை ஆரம்பித்து விட்டன. இதில் பேரினவாத சக்திகளும் தமது பங்குக்குச் சிங்கள பௌத்த இனம் குறித்துப் பேச ஆரம்பித்து விட்டன. இவற்றின் கருத்துக்கள் பெரும்பாலும் சிறுபான்மை சமூகங்களின் தயவை - ஆதரவை நிராகரித்தே முன்வைக்கப்படுகின்றன.

ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்த வரையில் சாத்தியப்பட முடியாத இந்த இனவாதப் பரப்புரைகள் குறித்து நாம் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. சிறுபான்மை சமூகங்களின் ஆதரவின்றி எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் வெற்றிபெறவே முடியாது.

எனவே, முஸ்லிம் மக்கள் இந்தத் தேர்தலில் தமது பேரம்பேசும் சக்தியைத் தக்க வைத்துக்கொண்டு சமூகத்தின் நலன் காக்கும் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது காலத்தின் அவசியமாகும்.

கடந்த காலங்களைப் போன்று வாய்மூலமான உத்தரவாதங்களையும் நம்பிக்கை ஊட்டும் பேச்சுகளையும் நம்பி ஏமாந்துவிடக் கூடாது. காத்திரமான ஒப்பந்தங்களுடான ஆதரவுகளை வழங்கி சமூகத்தின் மேன்மை சிறக்கும் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிணைந்து இப்பொழுதே மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக முஸ்லிம் மக்கள் எடுப்பார் கைப்பிள்ளைகள் போன்று அவரவர் தத்தமது சுயலாபம் கருதி முன்வைக்கும் கருத்துகளுக்குச் செவிசாய்க்காது நமது தனித்துவத்தைக் காக்கும் சக்தியை வலுப்படுத்தி ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Like This Video