வெற்றி பெறும் கூட்டணி என்னிடம் இருக்கின்றது! அமைச்சர் சஜித் உறுதி

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிப்பது தொடர்பாக பேச வேண்டும் என்று கூறுவது மிகவும் மோசமான செயற்பாடு என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தேர்தல் தினம் மற்றும் வேட்புமனுக்களை பெறும் தினம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது தொடர்பாக பேசுவது என்பது அவமதிக்கும் செயலாக நான் காண்கின்றேன்.

மக்களின் ஜனநாயக உரிமையை எட்டி உதைப்பதாக காண்கின்றேன். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிப்பது என்றால், இரண்டு வாரங்களுக்கு முன்னர் பேசி இருக்கலாம். அல்லது கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பேசியிருக்கலாம். அப்போது ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இப்படியான தலைப்பு பற்றி பேசுவதை என்னால், எண்ணிப்பார்க்க முடியவில்லை. யாருக்கு இப்படியான எண்ணம் தோன்றியது என்பது தெரியவில்லை எனவும் சஜித் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொண்டு வந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிப்பது தொடர்பான யோசனைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன் பிரதமரை விமர்சித்துள்ளார்.

இது குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், இந்த விடயமானது கூட்டணி ஏற்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்துமா என அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த அவர், தன்னிடம் வெற்றி பெறும் கூட்டணி இருப்பதாகவும் நிச்சயம் தன்னிடம் வெற்றி பெறும் கூட்டணி இருக்கின்றது எனவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் முயற்சிகளின் பின்னணியில் சஜித் அச்சம் இருப்பதாகவும் அனைத்தும் நலமாக நடக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.