விசாரணையில் ஆஜராகுமாறு சஜித்திற்கு அழைப்பாணை

Report Print Steephen Steephen in அரசியல்

அமைச்சர் சஜித் பிரேமதாசவை நாளைய தினம் முற்பகல் 9.30இற்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் ஒன்றை வழங்குமாறு ஆணைக்குழு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

திறைசேரியில் முகாமைத்துவ சேவை திணைக்களத்தின் அனுமதியின்றி, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் ஒழுங்கற்ற நியமனங்களை வழங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக நடத்தப்படும் விசாரணையில் ஆஜராகுமாறு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாகர பலன்சூரியவையும் ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறும் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முகாமைத்துவ உதவியாளர் பதவிகளுக்கு ஒழுக்கற்ற வகையில் ஊழியர்களை பணியில் இணைத்துக்கொண்டுள்ளதாக கூறி, அந்த அதிகார சபையின் ஸ்ரீலங்கா சுதந்திர ஊழியர் சங்கம், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் செய்துள்ள முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கு அமைய அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் வாக்குமூலத்தை பெற ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பணியில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஊழியர்களில் 95 சதவீதமானவர்கள் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.