ஜனாதிபதி செயலகத்திற்கு விரைந்துள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு

Report Print Gokulan Gokulan in அரசியல்

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதியிடம் சாட்சியம் பதிவு செய்வதற்காகவே இன்று காலை குறித்த குழு ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளது.

இறுதி சாட்சியாளரான ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் அறிக்கையை நிறைவு செய்வதற்கு தெரிவுக்குழு தீர்மானம் எடுத்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க சபாநாயகரால் நியமிக்கப்பட்ட விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழு கடந்த மே மாதம் 22ம் திகதி தொடக்கம் தமது விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

கடந்த மாதம் அதற்கான அறிவிப்பை விடுத்த போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தெரிவுக்குழு முன்னிலையில் பிரசன்னமாக மறுப்புத் தெரிவித்திருந்தார்.

பின்னர் தெரிவுக்குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி எழுத்துமூல அறிவிப்பை ஜனாதிபதிக்கு விடுத்ததை அடுத்து தான் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராக இணக்கம் தெரிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எழுத்துமூல அறிவிப்பை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் இன்றைய தினம் குறித்த சாட்சிய பதிவு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.