அடுத்த ஜனாதிபதி யார்? தமது ஆதரவு தொடர்பில் கூறுகிறார் ரிஷாட்

Report Print Sujitha Sri in அரசியல்

இனவாத சக்திகளின் நடவடிக்கைகளையும், எண்ணங்களையும் தவிடுபொடியாக்கும் வகையில், ஜனாதிபதி வேட்பாளரை அடையாளப்படுத்தும் நல்லதொரு முடிவை, சிறுபான்மை கட்சிகள் ஒருமித்து மேற்கொள்ளுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட மகளிர் அமைப்பின் அமைப்பாளரும், தையல் பயிற்சி நிலையத்தின் பொறுப்பாளருமான சலாஹுதீன் ஜிப்ரியாவின் ஏற்பாட்டில்

தையல் பயிற்சியினை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வு வவுனியா, பட்டாணிச்சூர், புளியங்குளத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

அடுத்த ஜனாதிபதி யார்? என்பது எல்லோர் மனதிலும் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. பலருக்கு இந்த விடயம், ஒரு ஏக்கமாகவும் இருக்கின்றது.

கடந்த அரசை உருவாக்குவதில், சிறுபான்மை மக்களினது பங்களிப்பு பிரதானமானது. 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு நமக்கு வந்த சவால்கள், சோதனைகள், துன்பங்கள் அனைவர் மனதிலும் இன்னும் இருக்கின்றன.

பெரும்பான்மைக் கட்சிகள் வேட்பாளர்களைத் தெரிவு செய்வதிலும் அறிவிப்பதிலும் மும்முரங்காட்டி வருகின்றன. இந்த வகையில், சிறுபான்மைக் கட்சிகள் தமது மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்றவகையில், தமக்கிடையிலே கருத்தாடல்களில் ஈடுபட்டு வருகின்றன.

கருத்து வேற்றுமைகள் மற்றும் கொள்கை வேறுபாடுகள் ஆகியவற்றை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, நாம் இடையறாது கலந்துரையாடி வருகின்றோம்.

பெரும்பான்மை சமுதாயத்தைப் போஷிப்பது போன்று, சிறுபான்மைச் சமுதாயத்தையும் கௌரவமாகவும் சமத்துவமாகவும் நடத்தும் ஒரு நாட்டுத் தலைமையை உருவாக்குவதில் ஒருமித்து செயற்படுகின்றோம்.

சிறுபான்மைக் கட்சிகள் வேறுபட்ட போதும், அந்த மக்களின் அபிலாஷைகளை பெற்றுக்கொடுக்கக் கூடிய தலைவரை அடையாளம் காண்பதில்,

எம்மிடம் கருத்து வேற்றுமை கிடையாது. தேர்தலில் வெற்றிபெறக் கூடிய ஒருவருக்கே எமது ஒருமித்த ஆதரவை வழங்க வேண்டும்.

இனவாதத்தைக் கக்கி, அதன் மூலம் ஆட்சிக் கதிரையை கைப்பற்ற முடியுமென ஒரு கூட்டம் துடியாய்த் துடிக்கின்றது. என்ன விலை கொடுத்தேனும் ஆட்சியை கைப்பற்றுவதிலேயே அவர்கள் குறியாய் இருக்கின்றனர்.

இந்த நடவடிக்கையை முறியடிக்க கூடிய வகையில், சிறுபான்மை மக்கள் தமது நிலைப்பாட்டை எடுத்து, அனைவரையும் அரவணைக்கும் தலைவனை தெரிவுசெய்ய வேண்டும். இதற்காகவே நாங்கள் அயராது பாடுபடுகின்றோம்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இனஉறவுக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகின்றது. அதற்காக உழைத்தும் வருகின்றது. அண்மைக்காலங்களில் நாம் அதனை செயலில் நிரூபித்துள்ளோம் என கூறியுள்ளார்.