சம்பிக்க ரணவக்கவின் யோசனையை ஏற்க மறுத்த பிரதமர்

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பில் நிறுத்தப்படும் ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவை எதிர்வரும் 25 ஆம் திகதி கூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களின் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை கூறியுள்ளார்.

அப்போது கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்ய ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அத்துடன் வேட்பாளராக போட்டியிட ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் முன்வந்தால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிகமான வாக்குகளை பெறும் நபரை வேட்பாளராக தெரிவு செய்ய வேண்டும்.

ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளரை தெரிவு செய்ய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிற்கு ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது. அதற்கு முன்னர் வேட்பாளரை தெரிவு செய்யுமாறு நாங்கள் கூறினோம். அந்த காலஅவகாசம் முடிந்து விட்டது. இதனால், தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து தீர்மானம் ஒன்றை எடுப்போம் என சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள பிரதமர், இந்த யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யும் அதிகாரம் கட்சியின் செயற்குழுவிற்கே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்க, “ உங்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டு வரும் போது எங்களுக்கு பின்னால் வருவீர்கள், தற்போ எங்களை வேண்டாம் என்கிறீர்கள்,நல்லது பார்ப்போம்” எனக் கூறி விட்டு கூட்டத்தில் இருந்து எழுந்து சென்றுள்ளார்.

அதேவேளை ஜனாதிபதி வேட்பாளராக சபாநாயகர் கரு ஜயசூரியவை நிறுத்த ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட முயற்சியும் தோல்வியடைந்துள்ளது. சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்துவதில்லை என்ற கடும் நிலைப்பாட்டில் ரணில் விக்ரமசிங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட போவதாக எதிர்வரும் 25 ஆம் திகதி செயற்குழுழவ அழைத்து அறிவிக்க உள்ளதாகவும் அப்போது தானும் போட்டியிடுவதாக அமைச்சர் சஜித் பிரேமதாச அறிவித்தால், வாக்கெடுப்பை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் 90 உறுப்பினர்கள் அங்கம் வகிக்க வேண்டும். எனினும் தற்போது செயற்குழுவில் 63 உறுப்பினர்களே இருக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் அமைச்சர் சஜித் பிரேதாசவை பகிரங்கமாக ஆதரிக்கின்றனர்.

இவ்வாறான நிலைமையில், கட்சியின் தலைவர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கட்சியின் யாப்பில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில், உடனடியாக 30 பேரை செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers

loading...