ரணில், மைத்திரி, மகிந்த மூவரும் இணைந்து எடுத்த முடிவே ஜனாதிபதி முறைமை ஒழிப்பு

Report Print Navoj in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஆகியோர் ஒன்றிணைந்து ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்யும் வேலைத் திட்டத்தினை செய்துள்ளனர் என விவசாய, நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்துள்ளார்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் கீழ் இயங்கும் கோல்ட் உடற்பயிற்சி நிலையத்தினை திறந்து வைக்கும் நிகழ்வில் நேற்று மாலை கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலில் யார் வரவேண்டும் என்கின்ற விடயத்தில் முன்னுக்கு பின் முரணாகவும், சர்ச்சைகளுக்கு மத்தியிலும் இந்த நாட்டில் நான் ஜனாதிபதியாக வந்துவிட வேண்டும் என்று இரண்டு கட்சியினர் பெயர் குறிப்பிட்டுள்ளனர்.

அதில் பொதுஜன பெரமுன கட்சி சார்பில் கோத்தபாய ராஜபக்ஸ, ஜே.வி.பி கட்சி சார்பில் அதன் தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்தவரையில் சஜித் பிரேமதாசவை நாட்டின் ஜனாதிபதியாக களமிறக்க வேண்டும் என்று நாட்டிலுள்ள ஒட்டு மொத்த இளைஞர் சமூகம், கல்வியாளர்கள், பெரியவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

ஆனால் இன்னுமொரு இழுபறி சூழ்நிலை இந்த நாட்டில் நடந்து கொண்டிருப்பதை அறிந்திருப்பீர்கள். இதன் நடுவிலே திரைமறைவில் பாரிய சதிவலைகளை செய்வதற்கு அரசியல் தலைவர்கள் முண்டியடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த நாட்டிலுள்ள எல்லா கட்சி தலைவர்களும் ஒன்றிணைந்து ஜனாதிபதி முறைமையை இல்லாமல் செய்ய வேண்டும் என்று அமைச்சரவையில் அதிரடி நடவடிக்கையை எடுப்பதற்கான முடிவு தோல்வியில் நிறைவடைந்துள்ளது. நாட்டினுடைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த மகிந்த ராஜபக்ஸ ஆகியோர் ஒன்றிணைந்து இந்த வேலைத்திட்டத்தினை செய்துள்ளனர்.

ஏன் சொல்லுகின்றேன் என்றால் அமைச்சரவையில் அமைச்சரவை பத்திரம் சிபார்சு செய்யப்பட்டால் நாடாளுமன்றத்திற்கு போக வேண்டும். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுக்க வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மை மகிந்த, மைத்திரி விரும்பாமல் இதற்கான சமிக்கை பிரதமருக்கு தெரிந்திருக்க முடியாது.

எனவே இவர்கள் மூவரும் ஒத்துழைத்து இந்த பணியை செய்ய வேண்டும் என்கின்ற விடயத்தில் மூக்குடைபட்டு இருக்கின்றார்கள். சிறுபான்மை கட்சிகளுடைய குரல்வலைகளை நசுக்குகின்ற, தமிழ் அல்லது முஸ்லிம் கட்சிகளை புறம்தள்ளி விட்டு நாங்கள் நினைத்ததை சாதித்து விடலாம் என்ற நிலவரத்தில் எந்த கட்சி தலைவர்களாவது முண்டியடித்துக் கொள்வார்களாக இருந்தால் இந்த நாட்டிலுள்ள சிறுபான்மை கட்சி தலைவர்கள் விட்டுக் கொடுப்பு செய்யமாட்டார் என்பதை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெளிவாக உள்ளது.

சிறுபான்மை சமூகத்தினை தள்ளிவிட்டு இவர்கள் ஒன்று கூடினார்கள். இதற்கு கை தூக்க வேண்டும் என்றும், அமைச்சரவை பத்திரம் சிபார்சு செய்ய வேண்டும் என்றும், அவர்கள் நினைத்த நிகழ்வுக்கு சிறுபான்மை கட்சியினுடைய தலைவர்கள் ஏகோபித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மனோகணேசன், திகாம்பரம் ஆகியோரது கட்சி எல்லோரும் ஒன்றிணைந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த அநியாயத்தை செய்வதற்கு நாங்கள் விட மாட்டோம்.

இந்த நாட்டிலே பிரதமருக்கு தெளிவாக சொல்லப்பட்டு இருக்கின்ற ஒரு மரண சமிக்கை. சிறுபான்மையினரை புறம்தள்ளி அல்லது அவர்களை ஏமாற்றி, திரைமறைவில் தள்ளிவிட்டு நீங்கள் காரியம் சாதிக்க முடியும் என்று நினைத்தால் அதற்கு சிறுபான்மை சமூகம் ஒரு காலமும் விட்டு வைக்காது என்று நினைக்கின்றேன்.

ரணில் விக்கிரமசிங்கவை பொறுத்தவரையில் சிறுபான்மை சமூகம் நம்புகின்ற ஒரு தலைவன், அந்த நம்பிக்கையை சிறுபான்மை சமூகம் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை உங்களுக்கு சாதகமாக உதாசீனம் செய்து விடக் கூடாது என்று நான் வினயமாக சொல்லுகின்றேன்.

அது மைத்திரிபால ஜனாதிபதியாக இருந்தாலும் சரிதான், மகிந்த ராஜபக்ஷவாக இருந்தாலும் சரிதான் இவைகள் எல்லாம் ஆட்சியின் பீடத்தை ஏற வேண்டும். ஜனாதிபதி கதிரையை கைப்பற்ற வேண்டும் என்கின்ற வெறியோடு அலைகின்ற இந்த சூழலில் மிக விரைவில் ஒரு தீர்வை எடுக்க வேண்டிய நிலையில் ஐக்கிய தேசிய கட்சி இருக்கின்றது.

எனவே எதிர்காலத்தில் இந்த நாட்டில் எல்லோரும் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் சஜித் பிரேமதாச களமிறங்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அதனை நாங்களும் எதிர்பார்க்கின்றோம். இந்த நாட்டினுடைய மக்களின் எதிர்பார்ப்பை பிரதமர், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மக்களுடைய ஒட்டுமொத்த எதிர்பார்ப்பை, அபிலாசைகளை அநியாயம் செய்து விடக்கூடாது.

எதிர்வரும் காலங்களில் சிறுபான்மை சமூகம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு ஒற்றுமையாக வாக்களித்தோமோ, அதைவிட பல மடங்கு நாங்கள் அவசரப்பட வேண்டியுள்ளது. வேலைத் திட்டங்கள் செய்ய வேண்டியுள்ளது. இல்லையெனில் ஒட்டுமொத்த சிறுபான்மை சமூகமும் ஐந்து வருடமல்ல பதினைந்து வருடங்களுக்கு ஒப்பாரி வைத்து அழவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டு போகும்.

எமது சமூக அடையாளம் தொலைந்து போகும். எங்களுடைய தனியான அடையாளங்களை இழந்து விடுவோமோ என்று அச்சப்படுகின்றோம். அச்சப்படுதல் என்பது எல்லோரும் ஒன்றிணைந்து இந்த நாட்டில் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்படுகின்ற நல்ல பண்பாட்டு, நல்ல விழுமியங்களை கொண்ட தலைவனை தெரிவு செய்து கொள்வது சிறுபான்மை சமூகத்தின் தேவைப்பாடு என்பதை தெளிவாக உள்வாங்க வேண்டும்.

தேர்தல் காலம் வரும் போது கோத்தா என்றும், மைத்திரி என்றும் எமது பிரதேசத்தில் புதிய தலைவர்கள் உலாவி வருவார்கள். இதில் நீங்கள் விழிப்பாக இருக்க வேண்டும். தேர்தல் காலத்தில் உங்களது வாக்குகளை பேரம் பேசுகின்ற நிலவரத்தை கடந்த காலத்தில் கண்டவர்கள்.

எனவே எதிர்வரும் காலங்களில் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். எமது வாக்குகளை பெறுமதியான வாக்குகளாக பார்க்கின்றோம். ஐம்பது வீதத்திற்கு மேல் அதிகமான வாக்கினை பெறுபவர் தான் ஜனாதிபதியாக வர முடியும்.

பலர் கட்சிகள் கேட்கின்ற காரணத்தினால் குறித்த எல்லையை தாண்டி விடுவார்களா என்ற சந்தேகம் எங்களிடத்தில் இருக்கின்றது. எனவே சிறுபான்மை சமூகம் கடந்த காலத்தில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதில் காட்டிய ஆர்வத்தை விட பலமடங்கு வரவுள்ள தேர்தலில் காட்டினால் மாத்திரம் தான் நாங்கள் எதிர்பார்க்கின்ற ஒரு அரசியல் தலைமையை, நிம்மதியான, வெள்ளை வான் கலாசாரம் இல்லாத, துப்பாக்கி கலாசாரம் இல்லாத, முகமூடி அணிந்து கடத்துகின்ற கலாசாரம் இல்லாத தலைவனை தேர்ந்தெடுக்கவேண்டிய தேவைப்பாட்டுக்குள் இருக்கின்றோம், என்றார்.

ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரி.அஸ்மி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி திணைக்கள உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஸ்,வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் எஸ்.சிஹாப்தீன், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள்,பிரதேச சபை உறுப்பினர்கள், இளைஞர்கள்,பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Latest Offers

loading...