மகிந்தவுக்காக 2005இல் கோத்தபாய வாக்களிக்கவில்லை..

Report Print Jeslin Jeslin in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள கோத்தாப ராஜபக்ச கடந்த 2005ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

கோத்தபாய ராஜபக்ஷ 2003ஆம் ஆண்டில் அமெரிக்கப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்ட போதிலும் அப்போது அதனை எவரும் அறிந்திருக்கவில்லை.

ஆனாலும் அவர் தனது மனசாட்சிக்கும், நாட்டின் சட்டதிட்டங்களுக்கும் எதிராகச் செயற்படக்கூடாது என்று கருதி, 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட தனது சகோதரனுக்கு அவர் வாக்களிக்கவில்லை.

மாறாக நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டு தனது வாக்குரிமையைப் பயன்படுத்தாமல் இருப்பதற்கான தீர்மானத்தையே அவர் மேற்கொண்டார்.

அண்மையில் பத்திரிகையொன்றில் கோத்தபாய ராஜபக்ஷ அமெரிக்கப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொண்ட பின்னரும் கூட, 2005ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தார் என்று செய்தியொன்று வெளியாகியிருந்தது.

அரசியல் எதிரிகளால் திட்டமிட்டு செயற்படுத்தப்படும் வேலை என்று நாங்கள் அச்செய்தியைப் பெரிதாகக் கருத்திற்கொள்ளவில்லை. ஆனால் தற்போது இதுகுறித்த விசேட விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக குற்ற விசாரணைப்பிரிவு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவிற்கு அறிவித்திருக்கிறது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் பொலிஸாரையும் பயன்படுத்திக்கொண்டு எம்மீது சேறுபூசும் செயல்களில் இறங்கியிருப்பது புலனாகின்ற காரணத்தினால் இவ்விவகாரம் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டிய தேவை எழுந்திருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers

loading...