ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றார் சஜித்?

Report Print Murali Murali in அரசியல்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், அமைச்சர் சஜித் பிரேமதாச அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்,தனித்துப் போட்டியிடுவது தொடர்பாக, நேற்று கூட்டம் ஒன்றை நடத்தி ஆலோசனை நடத்தியுள்ளனர்.

அமைச்சர் கபீர் காசிம் தலைமையில் நாடாளுமன்ற கட்டடத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைபீடம், சஜித் பிரேமதாசவுக்கு வாய்ப்பை வழங்காவிட்டால், தேர்தலில் மாற்று ஏற்பாடுகளின் கீழ் போட்டியிடுவது குறித்தே இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

இதில், ஐக்கிய தேசியக் கட்சியின் 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி நடத்தப்படும் என்பதை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது.

இந்நிலையில் பிரதான கட்சியான பொதுஜன முன்னணி, தமது வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது.

அதேபோல மக்கள் விடுதலை முன்னணியும் தமது வேட்பாளராக கட்சியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்கவை அறிவித்திருந்தது.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இதுவரை ஜனாதிபதி வேட்பாளர்களது பெயரை அறிவிக்கவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தெரிவு செய்வதில் அந்த கட்சிக்குள் பெரும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என அந்த கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் விருப்பம் வெளியிட்டுள்ளனர்.

எனினும், அதற்கு கட்சியின் தலைமை மற்றும் மூத்த உறுப்பினர்கள் மறுப்பு வெளியிட்டு வருகின்னர். எனினும், தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது உறுதி என அமைச்சர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

இந்நிலையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைபீடம், சஜித் பிரேமதாசவுக்கு வாய்ப்பை வழங்காவிட்டால், தேர்தலில் மாற்று ஏற்பாடுகளின் கீழ் போட்டியிடுவது குறித்து ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest Offers

loading...