ஜனாதிபதி வேட்பாளர் போட்டியிலிருந்து பின்வாங்குகின்றார் ரணில்?

Report Print Murali Murali in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் இருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பின்வாங்கியிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தானும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தில் பிரதமர் இருந்தார்.

எனினும் வரும் 24 அல்லது 25ம் திகதி வேட்பாளரது பெயரையும் ஐக்கிய தேசியக் கட்சி அறிவிக்கவுள்ள நிலையில் போட்டியிலிருந்து பிரதமர் பின்வாங்கியிருப்பதாக அலரிமாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.

எவ்வாறாயினும். சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோரும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16ம் திகதி நடத்தப்படும் என்பதை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தது. இந்நிலையில் பிரதான கட்சியான பொதுஜன முன்னணி, தமது வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தது.

அதேபோல மக்கள் விடுதலை முன்னணியும் தமது வேட்பாளராக கட்சியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்கவை அறிவித்திருந்தது.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இதுவரை ஜனாதிபதி வேட்பாளர்களது பெயரை அறிவிக்கவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தெரிவு செய்வதில் அந்த கட்சிக்குள் பெரும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என அந்த கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் விருப்பம் வெளியிட்டுள்ளனர்.

எனினும், அதற்கு கட்சியின் தலைமை மற்றும் மூத்த உறுப்பினர்கள் மறுப்பு வெளியிட்டு வருகின்னர். எனினும், தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது உறுதி என அமைச்சர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

அந்த வகையில் நாளைய தினம் பிரதமர் ரணில்விக்ரமசிங்கவும், அமைச்சர் சஜித் பிரேதாசவும் சந்தித்து பேசவுள்ளனர். ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இருவரும் பேசுவர்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையிலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தில் இருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பின்வாங்கியிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

Latest Offers

loading...